தர்ஷன் தண்டிக்கப்பட வேண்டியவர் மவுனம் கலைத்தார் நடிகர் சுதீப்
தர்ஷன் தண்டிக்கப்பட வேண்டியவர் மவுனம் கலைத்தார் நடிகர் சுதீப்
தர்ஷன் தண்டிக்கப்பட வேண்டியவர் மவுனம் கலைத்தார் நடிகர் சுதீப்
ADDED : ஜூன் 17, 2024 04:24 AM

பெங்களூரு : ''வாழ வேண்டிய வயதில் சினிமா ரசிகர் ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினருக்கு, நியாயம் கிடைக்க வேண்டும்,'' என நடிகர் சுதீப் உருக்கமாக தெரிவித்தார்.
கன்னட திரையுலகில் தர்ஷன், சுதீப் இருவருமே ஸ்டார் நடிகர்கள். லட்சக்கணக்கான ரசிகர்களை வைத்துள்ளனர். இவர்களுக்குள் பனிப்போர் நடந்ததும் உண்டு. பரஸ்பரம் விமர்சித்தும் கொள்வர். இவர்களின் ரசிகர்களுக்கு இடையே, பலமுறை அடிதடி நடந்ததும் உண்டு.
தன் காதலி பவித்ரா கவுடாவுக்கு, ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்தார் என்பதற்காக, சித்ரதுர்காவின் ரேணுகாசாமியை நடிகர் தர்ஷன் கூலிப்படையை ஏவி, கொலை செய்த குற்றச்சாட்டில் சிக்கி, கைதாகியுள்ளார்.
இவரது செயலை பலரும் கண்டித்தனர். தர்ஷனுக்கு கன்னட திரையுலகில் தடை விதிப்பது குறித்து, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஆலோசித்து வருகிறது.
இது தொடர்பாக எந்த கருத்தையும் வெளியிடாமல் இருந்த நடிகர் சுதீப் நேற்று கூறியதாவது:
வாழ வேண்டிய வயதில் ரேணுகாசாமி கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது குடும்பத்தினருக்கு, நியாயம் கிடைக்க வேண்டும்.
உண்மையை வெளியே கொண்டு வர, போலீசாரும், ஊடகத்தினரும் முயற்சிக்கின்றனர். நியாயமான முறையில் விசாரணை நடக்க வேண்டும்.
சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்படி, நடந்து கொள்ள வேண்டும்.
திரையுலகுக்கு கரும்புள்ளி ஏற்படுவதில், எங்களுக்கு விருப்பம் இல்லை. மூத்தவர்கள் உருவாக்கி வளர்த்த திரையுலகம், யாரோ ஒருவரால் பாழாக கூடாது.
குற்றச்சாட்டில் இருந்து வெளியே வந்த பின், திரையுலகில் தடை விதித்து பயன் என்ன. நான் யாருக்கு ஆதரவாகவும் இல்லை; எதிராகவும் இல்லை. நியாயத்தின் பக்கம் தான் நிற்கிறேன்.
சூழ்நிலை சரியாக தோன்றவில்லை. திரையுலகிற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
திரையுலகில் ஒருவர், இருவர் அல்ல, ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உள்ளனர். குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தால், திரையுலகம் மகிழ்ச்சி அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.