ADDED : ஜூலை 27, 2024 12:24 AM

புதுடில்லி: காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுலுக்கு, டில்லி சுனேரி பாக் சாலையில், ஐந்தாம் எண் பங்களாவை லோக்சபா குழு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மோடி சமூகத்தினர் பற்றி அவதுாறாக பேசிய வழக்கில், குஜராத் சூரத் நீதிமன்றம் காங்., - எம்.பி., ராகுலுக்கு கடந்த ஆண்டில், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதையடுத்து, அவரது எம்.பி., பதவியும் பறிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அரசு ஒதுக்கியிருந்த டில்லி துக்ளக் லேனில் உள்ள, 12ம் எண் பங்களாவை காலி செய்தார்.
அதன்பின், டில்லி ஜன்பத் சாலையில் உள்ள அவரது தாய் சோனியா இல்லத்தில் தங்கினார்.
எனினும், சில மாதங்களில் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை திரும்ப பெறப்பட்டதையடுத்து, ராகுல் மீண்டும் லோக்சபா எம்.பி.,யானார். ஆனால், தொடர்ந்து அவர் தன் தாயுடன் வசித்தார்.
இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு ராகுல் வென்றார். அத்துடன் காங்கிரஸ், அதிக தொகுதிகளை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றது.
இதன்படி, லோக்சபாவில் அந்த கட்சியின் எதிர்க்கட்சி தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இது, கேபினட் அமைச்சர் அந்துஸ்துக்கு இணையான பதவி என்பதால், அவருக்கு விசாலமான அரசு பங்களா ஒதுக்கப்படும் என தகவல் வெளியானது.
இந்நிலையில், டில்லி சுனேரி பாக் சாலையில் உள்ள ஐந்தாம் எண் வீட்டை அளிக்க, வீடுகளை ஒதுக்கும் லோக்சபா குழு முன்வந்துள்ளது.
இந்த பங்களாவை ராகுலின் சகோதரி பிரியங்கா, நேரில் சென்று நேற்று பார்வையிட்ட நிலையில், ராகுலின் ஒப்புதலுக்காக லோக்சபா குழுவினர் காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.