Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கன்வர் யாத்திரையில் பெயர் பலகை ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் உ.பி., அரசு விளக்கம்!

கன்வர் யாத்திரையில் பெயர் பலகை ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் உ.பி., அரசு விளக்கம்!

கன்வர் யாத்திரையில் பெயர் பலகை ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் உ.பி., அரசு விளக்கம்!

கன்வர் யாத்திரையில் பெயர் பலகை ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் உ.பி., அரசு விளக்கம்!

ADDED : ஜூலை 27, 2024 12:23 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: கன்வர் யாத்திரையை வெளிப்படை தன்மையுடன் அமைதியாக நடத்தவும், உணவு விஷயத்தில் பக்தர்கள் இடையே குழப்பத்தை தவிர்க்கும் நோக்கத்திலும் தான்.

உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பெயர் பலகையை உணவகங்களில் வைக்க உத்தரவிடப்பட்டதாக உத்தர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில், சிராவண மாதத்தில் ஆண்டுதோறும் கன்வர் யாத்திரை நடப்பது வழக்கம்.

வட மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து, உத்தரகண்டின் ஹரித்வாரில் இருந்து புனிதநீர் எடுத்துச் சென்று தங்கள் ஊரில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வர். இந்த ஆண்டுக்கான கன்வர் யாத்திரை ஜூலை 22 முதல் ஆக., 6 வரை நடக்கிறது.

இந்நிலையில், பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் வழித்தடங்களில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர் அடங்கிய பலகையை வாடிக்கையாளர் கண்ணில்படும்படி மாட்டி வைக்க உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மத்திய பிரதேச அரசுகள் சமீபத்தில் உத்தரவிட்டன.

இது முஸ்லிம் வியாபாரிகளை ஒடுக்குவதற்கான நடவடிக்கை என்ற விமர்சனம் எழுந்தது. மாநில அரசுகளின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பெயர் பலகை வைக்கும் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த 22ல் உத்தரவிட்டது.

மேலும், மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதன்படி, உ.பி., அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

அதன் விபரம்:

கன்வர் யாத்திரையில், ஆண்டுதோறும் 4.07 கோடி பக்தர்கள் பங்கேற்கின்றனர். யாத்திரை செல்லும் பாதையில் அசைவ உணவு விற்க கூடாது என்பதை தவிர, வேறு தடைகள் இல்லை.

யாத்திரையை வெளிப்படை தன்மையுடன் அமைதியான முறையில் நடத்தவே பெயர் பலகை வைக்க உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த உத்தரவு இரண்டு வார காலத்திற்கு மட்டுமே பொருந்தும்.

இதில், பங்கேற்கும் கோடிக்கணக்கான பக்தர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள். பயபக்தியுடன் காலணி கூட அணியாமல் யாத்திரை செல்வர்.

உணவு விஷயத்தில் சிறிய குழப்பம் ஏற்பட்டாலும் மத ரீதியாக அவர்கள் புண்படுவர். இது மிகப் பெரிய கலவரங்களுக்கு வழிவகுத்துவிடும். அது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கவே பெயர் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ம.பி., மற்றும் உத்தரகண்ட் அரசுகள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதை தொடர்ந்து, பெயர் பலகை வைக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை நீட்டித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை ஆக., 5க்கு ஒத்தி வைத்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us