ADDED : ஜூன் 05, 2024 11:30 PM
பிஜப்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் பதுங்கியிருந்த ஒன்பது நக்சல்களை, போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஐந்து பேர், போலீஸ் காரை தாக்கியதில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்து உள்ளது.
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பர்சேகர் பகுதியில், இரு போலீசார் கடந்த மாதம் 15ல் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, காரை நக்சல்கள் வெடிகுண்டு வைத்து தகர்த்தனர்.
இதில் கார் சேதமடைந்த நிலையில், அதில் பயணித்த போலீஸ் அதிகாரி உட்பட இருவரும் காயமின்றி உயிர் தப்பினர். இந்த தாக்குதலில் தொடர்புடைய ஐந்து நக்சல்களை பிடித்து தருபவர்களுக்கு, தலா 10,000 ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பர்சேகர் பகுதியில் உள்ள மன்டேம் - குப்ரேல் கிராமங்களில் பதுங்கியிருந்த குட்டு கும்மா, 25; புது கும்மா, 30; சுரேஷ் ஓயம், 29; வினோத் கோர்சா, 25; முன்னா கும்மா, 25, ஆகிய ஐந்து நக்சல்கள் மற்றும் மேடட் பகுதியில் பதுங்கியிருந்த நான்கு நக்சல்கள் என மொத்தம் ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்.
மேடட் பகுதியில் நக்சல் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்த நான்கு பேரில், தீவிர உறுப்பினராகச் செயல்பட்ட லட்சு பூனம் என்பவரை பிடித்து தருபவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அரசு அறிவித்துஇருந்தது.
பிடிபட்ட ஒன்பது நக்சல்களும், கொலை, பாதுகாப்பு படையினரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது, சாலைகளை உடைத்து சேதப்படுத்துதல், சட்டவிரோதமாக வரி வசூலித்தல் போன்ற முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் என விசாரணையில் தெரிய வந்துஉள்ளது.