ஆங்கிலம், ஹிந்தி கற்க முடிவு 73 வயது சோமண்ணா அதிரடி
ஆங்கிலம், ஹிந்தி கற்க முடிவு 73 வயது சோமண்ணா அதிரடி
ஆங்கிலம், ஹிந்தி கற்க முடிவு 73 வயது சோமண்ணா அதிரடி
ADDED : ஜூன் 16, 2024 11:02 PM

ராம்நகர்: ''அமைச்சர் பதவி எனக்கு முள் போன்றது. ஆங்கிலம், ஹிந்தி கற்று நன்றாக பணியாற்றுவேன்,'' என மத்திய ஜல்சக்தி இணை அமைச்சர் சோமண்ணா, 73 தெரிவித்தார்
ராம்நகர் மாவட்டம், கனகபுராவில் நேற்று முன்தினம் நடந்த கோவில் விழாவை ஒட்டி, மத்திய ஜல் சக்தி இணை அமைச்சர் சோமண்ணாவுக்கு பாராட்டு விழா நடந்தது.
இதில் அவர் பேசியதாவது:
பிரதமர் மோடியின் சிறப்பான நடவடிக்கை; சிந்தனை மிக வேகமாக இருக்கும். நாங்கள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கு முன், 71 அமைச்சர்களிடம், நாட்டின் பிரச்னைகள், சவால்கள் குறித்து பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
அமைச்சர் பதவி எனக்கு முள் போன்றது. பிரதமரின் விருப்பப்படி நிர்வகிப்பேன். 10 ஆண்டுகளில், 40,000 கி.மீ., ரயில் பாதை, இரட்டை பாதை, மின்சார பாதை போடப்பட்டு உள்ளன.
ஆங்கிலம், ஹிந்தி கற்று நன்றாக பணியாற்றுவேன். ரயில் தண்டவாளத்தில் சிக்கி, விலங்குகளை இறப்பதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜல் சக்தி துறை எனக்கு ஒதுக்கப்பட்டதற்கு, தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. நான், மாநிலத்துக்கு மட்டும் அமைச்சர் அல்ல; நாட்டுக்கு அமைச்சர். அனைத்து மாநிலங்களும் ஒன்று தான்.
எனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தில் இருந்து விலகாமல் பணியாற்றுவேன்.கிராமத்தில் பிறந்த எனக்கு, உலக தலைவர் பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மாநில அரசின் ஒத்துழைப்பு
துமகூரில் நேற்று நடந்த பா.ஜ., தொண்டர்கள் கூட்டத்தில் சோமண்ணா பேசியதாவது:
பிரதமர் மோடி, துமகூரு - ஆந்திரா ராயதுர்க் ரயில்வே திட்டத்தை, 2026ல் துவக்கி வைப்பார். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, துமகூரு மாவட்ட நிர்வாகம், ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, ரயில்வே திட்டத்துக்கு நிதி ஒதுக்கும்படி கூறியுள்ளேன். மத்திய அரசின் திட்டம் என்றாலும், திட்டம் வெற்றி அடைய, மாநில அரசின் ஒத்துழைப்பு வேண்டும். துமகூரு ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படும்.
பா.ஜ., மற்றும் ம.ஜ.த., ஒன்று சேர்ந்தால், என்ன நடக்கும் என்பதை தொண்டர்கள் காண்பித்துள்ளீர்கள்.
இதுபோன்று, கல்யாண கர்நாடகா, மத்திய கர்நாடகா, கித்துார் கர்நாடகாவில் பணியாற்றி இருந்தால், காங்கிரசுக்கு வெறும் இரண்டு தொகுதிகள் மட்டும் கிடைத்திருக்கும்.
மூன்று மாதங்களுக்கு முன், எனக்கும், துமகூருக்கும் சம்பந்தம் இல்லை. கட்சி மேலிடம் எடுத்த முடிவால், இங்கு வந்தேன். என்னை நீங்கள் வெற்றி பெற வைத்தீர்கள்.
பிரதமர் மோடி, எனக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுத்தார். இதற்கு இரண்டு கட்சிகளின் தொண்டர்களே காரணம்.
இவ்வாறு அவர் பேசினார்.