320 புதிய மின்சார பேருந்துகள் துவக்கம்
320 புதிய மின்சார பேருந்துகள் துவக்கம்
320 புதிய மின்சார பேருந்துகள் துவக்கம்
ADDED : ஜூலை 31, 2024 01:54 AM

பான்சேரா:டில்லியில் 320 புதிய மின்சார பேருந்துகளை மாநில துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா நேற்று கொடியசைத்துத் துவக்கிவைத்தார். இதன் மூலம் மின்சாரத்தால் இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை 1,970 ஆக உயர்ந்துள்ளது.
பான்சேராவில் நடந்த நிகழ்ச்சியில் புதிய பேருந்துகளை துவக்கிவைத்து சக்சேனா பேசியதாவது:
நாங்கள் 320 மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்துகிறோம். இவை டில்லி மக்களுக்கு நிவாரணம் அளிக்கும். வரும் காலத்தில், இதுபோன்ற பேருந்துகளை மேலும் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
டில்லியில் மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்றால், பொது போக்குவரத்தை பலப்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது அந்த திசையில் ஒரு படியாகும்.
இதில் இணைந்து செயல்படும் மத்திய மற்றும் டில்லி அரசாங்கங்கள் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எங்கள் முயற்சியாக இருக்கும். மாசுக்கு எதிரான போராட்டத்திற்கு இவை உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் பேசுகையில், “மின்சாரப் பேருந்துகளை அதிகம் இயக்கும் நகரங்களில், நாட்டிலேயே டில்லி முதல் இடத்தையும் உலகளவில் அதிக மூன்றாவது நகரமாகவும் மாறியுள்ளது,” என்றார்.
செய்தியாளர்களிடம் கைலாஷ் கெலாட் கூறியதாவது:
டில்லி போக்குவரத்துக் கழகம் மொத்தம் 7,683 பேருந்துகளைக் கொண்டுள்ளது. இவற்றில் 1,970 மின்சார பேருந்துகள் மற்றும் மீதமுள்ளவை சி.என்.ஜி.,யால் இயங்குபவை.
புதிய பேருந்துகள் சுக்தேவ் விஹார், கல்காஜி, நரைனா ஆகிய மூன்று பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும்.
இந்த பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், 25 சதவீத மின்சார பேருந்துகளை இயக்கும் இலக்கை எட்டியுள்ளோம்.
புதிய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள், அவசரகால பொத்தான்கள் பொருத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள், மொத்தம் 10,480 பேருந்துகளை இயக்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அவற்றில் 80 சதவீத பேருந்துகள் மின்சாரத்தில் இயங்குபவையாக இருக்கும்.