3 தமிழ் பள்ளிகளுக்கு அரணாக திகழும் இளைஞர்
3 தமிழ் பள்ளிகளுக்கு அரணாக திகழும் இளைஞர்
3 தமிழ் பள்ளிகளுக்கு அரணாக திகழும் இளைஞர்
ADDED : ஜூன் 29, 2024 11:14 PM

கர்நாடகாவில் பெங்களூரு, தங்கவயல், மைசூரு, சாம்ராஜ்நகர், குடகு, சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, ஷிவமொகா, ஹாசன், பெங்களூரு ரூரல் உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழர்கள் காலம், காலமாக வசிக்கின்றனர்.
லட்சக்கணக்கான தமிழர்கள் குடும்பத்தினருடன் வசதித்ததால், தங்களின் பிள்ளைகள், தாய்மொழியான தமிழ் மொழியில் படிக்க வேண்டும் என்று விரும்பினர். இதற்காக, அப்போதைய கர்நாடக அரசு, தமிழர்களின் வசதிக்காக தமிழ் பள்ளிகளை திறந்தது.
எஃகு தொழிற்சாலை
இந்த வகையில், ஷிவமொகா மாவட்டம், பத்ராவதியில் விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை அமைக்கப்பட்டது. இங்கு பெரும்பாலான ஊழியர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களின் பிள்ளைகளுக்காக பத்ராவதியின் ஹொசமனே, தரிகெரே சாலையின் புத்தங்குடி, நியூ டவுன் பத்ராவதி ஆகிய மூன்று பகுதிகளில், தலா ஒரு பள்ளி என மொத்தம் மூன்று தமிழ் அரசு உயர் நடுநிலைப்பள்ளிகள் அமைக்கப்பட்டன.
மூன்றிலுமே, ஒன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை இருக்கின்றன. ஆரம்ப கட்டத்தில், 1,200 முதல் 1,500 மாணவர்கள் வரை படித்து வந்தனர்.
பள்ளிகள் மூடல்
அதன் பின், பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகளை, ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்த்ததால், மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வந்தன.
தற்போது மூன்று தமிழ் பள்ளிகளிலும் சேர்த்து, 150 மாணவ - மாணவியர் மட்டுமே படிக்கின்றனர். மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மாநிலத்தின் பல இடங்களில் தமிழ் பள்ளிகள் ஒன்றன் பின், ஒன்றாக மூடப்பட்டு வருகின்றன.
இந்த வகையில், பத்ராவதியில் உள்ள தமிழ் பள்ளிகளையும் மூடுவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றனர். ஆனால், அங்குள்ள தமிழ் பிரமுகர்கள் ஒன்றிணைந்து, தடுத்து வருகின்றனர். இதில், 28 வயது கொண்ட இளைஞர் விஜய் சித்தார்த், முக்கிய பங்கு வகித்து வருகிறார்.
வழக்கறிஞராக பயிற்சி பெற்று வரும் அவர், தன் நண்பர்களை ஒன்றிணைத்து, மூன்று தமிழ் பள்ளிகளுக்கும் அரணாக திகழ்ந்து வருகிறார். ஆண்டுதோறும் மறக்காமல், தமிழர்களின் பாரம்பரிய முறையில், பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களுடன் இணைந்து கலை நிகழ்ச்சிகளும் நடத்தி வருகின்றார்.
விளையாட்டுப் போட்டிகள், ஆங்கில வகுப்புகள் நடத்தியும் மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றார். நோட்டு புத்தகங்கள், பைகள் என தொடர்ந்து உதவி வருகிறார். இவரது தாத்தா, பாட்டி வேலுாரை பூர்விகமாக கொண்டவர்கள். அவர்கள் காலத்தில் இருந்து பத்ராவதியிலேயே வசிக்கின்றனர்.
இவரது தமிழ் பணியை பாராட்டி, பல நண்பர்களும் உதவி வருகின்றனர். இதன் மூலம், தமிழ் பள்ளிகள் மூடப்படாமல் பாதுகாத்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழர்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும், நேரில் சென்று உதவுகிறார்
- நமது நிருபர் -.