லோக்சபாவுக்குள் நுழையும் 280 புதுமுக எம்.பி.,க்கள்
லோக்சபாவுக்குள் நுழையும் 280 புதுமுக எம்.பி.,க்கள்
லோக்சபாவுக்குள் நுழையும் 280 புதுமுக எம்.பி.,க்கள்
ADDED : ஜூன் 07, 2024 02:39 AM

புதுடில்லி : புதிதாக அமைய உள்ள, 18வது லோக்சபாவில், 280 புதுமுகங்கள் இடம்பெற உள்ளனர்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து, பி.ஆர்.எஸ்., ஆய்வு அமைப்பு நடத்திய ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளதாவது:
புதிதாக அமையவுள்ள, 18வது லோக்சபாவுக்கு தேர்வாகியுள்ள, 280 பேர் முதல் முறை எம்.பி.,க்களாவர். கடந்த 2019 தேர்தலின்போது, 267 புதுமுக எம்.பி.,க்கள் இருந்தனர்.
ஏற்கனவே எம்.பி.,யாக இருந்த, 263 பேர், தற்போது மீண்டும் தேர்வாகியுள்ளனர். இதைத் தவிர, 16 பேர் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தனர்.
ஒருவர், ஏழு முறை எம்.பி.,யாக இருந்துள்ளார். மீண்டும் தேர்வாகியுள்ள எம்.பி.,க்களில், எட்டு பேர் தங்களுடைய தொகுதியை மாற்றியுஉள்ளனர். ஒருவர், இரண்டு தொகுதிகளில் வென்றுள்ளார்.
கடந்த 17வது லோக்சபாவில் வெவ்வேறு கட்சிகளின் சார்பில் எம்.பி.,யாக இருந்த ஒன்பது பேர் தற்போது வேறு கட்சியின் சார்பில் நுழைகின்றனர். மேலும், எட்டு பேர், பிளவுபட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள். மத்திய அமைச்சர்களில், 53 பேரில், 35 பேர் வென்றுள்ளனர்.
புதிய லோக்சபாவில், 240 எம்.பி.,க்களுடன் தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., உள்ளது. அதற்கடுத்து, 99 பேருடன் காங்., இரண்டாம் இடத்தில் உள்ளது.
சமாஜ்வாதி, 37 பேருடன், மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த 2019 தேர்தலில், 36 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் எம்.பி.,க்களாக இருந்தனர். தற்போது, அது, 41 கட்சிகளாக உயர்ந்துள்ளது.
தேசிய கட்சிகளைச் சேர்ந்த, 346 பேர் எம்.பி.,யாக தேர்வாகியுள்ளனர். இது மொத்த எம்.பி.,க்களில், 64 சதவீதமாகும். அங்கீகாரம் பெற்றுள்ள மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த, 179 பேர் தேர்வாகியுள்ளனர். இது, 33 சதவீதமாகும். அங்கீகாரம் பெறாத கட்சிகளைச் சேர்ந்தவர்கள், 11 பேர். ஏழு பேர் சுயேச்சைகள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.