2,000 பணியிடங்களுக்கு 25,000 பேர் வந்ததால் அவதி
2,000 பணியிடங்களுக்கு 25,000 பேர் வந்ததால் அவதி
2,000 பணியிடங்களுக்கு 25,000 பேர் வந்ததால் அவதி
ADDED : ஜூலை 17, 2024 11:40 PM

மும்பை: ஏர் இந்தியாவின், 'ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸஸ்' நிறுவனம், நாட்டின் பல்வேறு விமான நிலையங்களிலும் நிர்வாகப் பணிகளை செய்து வருகிறது.
விமான நிலையங்களில் பயணியரின் பொருட்கள் உள்ளிட்ட சுமைகளை ஏற்றி இறக்குவதற்கான ஆள்சேர்ப்பு பணி நடந்து வருகிறது.
மொத்தம் 2,216 காலியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டது.
இதற்கான நேர்காணலில் பங்கேற்க மும்பை கலினா பகுதியில் உள்ள அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் காலை ஒரே சமயத்தில் 25,000க்கும் மேற்பட்டோர் திரண்டனர். 2 கி.மீ., துாரத்துக்கு மனித தலைகளாக காட்சிஅளித்தன.
அனைவரும் ஒரே சமயத்தில் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பலர், நெரிசலில் சிக்கி தவித்தனர்.
கூட்டம் அதிகரித்ததை அடுத்து, வந்திருந்தவர்களிடம் 'பயோ டேட்டா' மட்டும் பெறப்பட்டது.
தகுதியுடையவர்கள் பின்னர் நேரில் அழைக்கப்படுவர் என ஏர் இந்தியா அலுவலகம் தரப்பில் கூறப்பட்டதை அடுத்து, கூட்டம் படிப்படியாக கலைந்து சென்றது. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.