மருத்துவத்தை சேவையாக கருதும் '20 ரூபாய் டாக்டர்'
மருத்துவத்தை சேவையாக கருதும் '20 ரூபாய் டாக்டர்'
மருத்துவத்தை சேவையாக கருதும் '20 ரூபாய் டாக்டர்'
ADDED : ஜூலை 21, 2024 07:12 AM

இன்றைய காலத்தில் மருத்துவ சேவையை, பணம் சம்பாதிக்க மட்டுமே பலரும் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு இடையே, மருத்துவத்தை சேவையாக கருதும் சிலர் இருப்பது ஆறுதலான விஷயம் தான்.
கடவுளுக்கு அடுத்தபடியாக, உயிரை காப்பாற்றும் டாக்டர்களை, நடமாடும் கடவுளாக மக்கள் பார்க்கின்றனர். மருத்துவம் புனிதமான தொழில். ஆனால் பலரும், இதை பணம் கொழிக்கும் தொழிலாக பார்க்கின்றனர்.
சேவையாக நினைப்பவர்கள் அபூர்வம். தயவு தாட்சண்யமின்றி, ஏழைகளிடமும் பணத்தை கறக்கின்றனர்.
ஆயிரக்கணக்கில் பீஸ்
கட்டணம் செலுத்தவில்லை என, சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பிய உதாரணங்கள் ஏராளம். நோயாளிகளை தொட்டு பரிசோதிக்கவே, ஆயிரக்கணக்கில் பீஸ் வசூலிக்கும் டாக்டர்களே அதிகம்.
இத்தகைய டாக்டர்களுக்கு இடையே, மருத்துவ தொழிலை மக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தும் சிலர் இருக்கின்றனர். இவர்களில் டாக்டர் கிருஷ்ண மஹாபலேஸ்வர ஹெக்டேவும் ஒருவர்.
உத்தரகன்னடா, சிர்சியின் முன்டகேச கிராமத்தை சேர்ந்த இவருக்கு 72 வயதாகிறது. 40 ஆண்டுகளாக மருத்துவ தொழில் செய்கிறார்.
தற்போது ஹூப்பள்ளியின், உனகல் கிராசில் தன் வீட்டிலேயே கிளினிக் வைத்துள்ளார். இவர் மக்கள் இடையே, '20 ரூபாய் டாக்டர்' என்றே பிரசித்தி பெற்றவர்.
பணக்காரர்களோ, ஏழைகளோ சிகிச்சைக்காக யார் வந்தாலும், வெறும் 20 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கிறார். விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகள் கொடுத்தாலும், ஊசி போட்டாலும் 20 ரூபாய் கட்டணம் கொடுத்தால் போதும். ஏழைகளாக இருந்தால் 10 ரூபாய் மட்டும் பெறுகிறார்.
100க்கும் மேற்பட்டோர்
இந்த வயதிலும், காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கிளினிக்கில் இருக்கிறார். 35 ஆண்டுகளுக்கு முன்பு, ஹூப்பள்ளியில் செட்டிலான இவரிடம், அனைத்து வயதினரும் சிகிச்சைக்கு வருகின்றனர். தினமும் 100க்கும் மேற்பட்டோர், மருத்துவ பரிசோதனை செய்து கொள்கின்றனர்.
எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும், அதை குணமாக்க மருந்து கொடுக்கிறார். எனவே இவரை மக்கள், கடவுளாகவே பார்க்கின்றனர்.
தன் தொழிலை சேவையாக நினைக்கும் டாக்டர் கிருஷ்ண மஹாபலேஸ்வர ஹெக்டே, அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்கிறார். மற்றவர்களும் இவரை பின் பற்றினால் ஏழை நோயாளிகளுக்கு, உதவியாக இருக்கும்
.
- நமது நிருபர் -