192 வீடற்றவர்களின் சடலங்கள் மீட்பு வெட்டவெளிகளில் இறந்து கிடந்த பரிதாபம்
192 வீடற்றவர்களின் சடலங்கள் மீட்பு வெட்டவெளிகளில் இறந்து கிடந்த பரிதாபம்
192 வீடற்றவர்களின் சடலங்கள் மீட்பு வெட்டவெளிகளில் இறந்து கிடந்த பரிதாபம்
ADDED : ஜூன் 20, 2024 10:00 PM

புதுடில்லி:தேசிய தலைநகர் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் புதன்கிழமை இரவு வரையில் மட்டும் சாலையோரங்களிலும் வெட்டவெளியிலும் இறந்து கிடந்த 192 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தன்னார்வு தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நகரில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. வீட்டின் குழாய்களை திறந்தால் வெந்நீர் கொட்டுகிறது. வீட்டுக்குள் அனல் அடிக்கிறது. வெப்பத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
டில்லியில் புதன் கிழமை இரவு குறைந்தபட்ச வெப்பநிலை 35.2 டிகிரி செல்ஷியஸ். இது கடந்த 1969ம் ஆண்டுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் பதிவான இரவு வேளையில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலையில் இது அதிகம்.
பகலில் அதிகபட்சமாக 45 டிகிரி செல்ஷியஸ். ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் டில்லி மக்களுக்கு, வெப்பம் மேலும் அதிக நெருக்கடியை கொடுத்தது.
வெப்பத்தின் பாதிப்புகளை எதிர்கொள்ள முடியாமல் முதியோர் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. வீடில்லாமல் பூங்காக்களிலும் நடைபாதைகளிலும் தஞ்சமடைந்தவர்களின் நிலை பரிதாபம்.
இந்த வெப்பத்தால் வெப்ப வாதம் ஏற்பட்டு உயிரிழந்து, சாலையோரங்களிலும் பூங்காக்களிலும் வெட்டவெளிகளிலும் அநாதைகளாக 11ம் தேதி முதல் 19ம் தேதி வரையில் மட்டும் 192 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, வீடற்றவர்களுக்காக பணிபுரியும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமான ஹோலிஸ்டிக் டெவலப்மென்ட் மையம் கூறியுள்ளது.
வீடற்றவர்களின் மரணத்தைப் பொருத்தவரையில் வியாழக்கிழமை காலை வரையிலான 48 மணி நேரத்தில் 50 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தன. இதுதவிர பல்வேறு மருத்துவமனைகளில் நேற்று முன் தினம் வரையில் மட்டும் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதில் சப்தர்ஜங் மருத்துவமனையில் 13 பேரும் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் நான்கு பேரும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் ஐந்து பேரும் உயிரிழந்துள்ளனர்.
தேசிய தலைநகரில், கடந்த இரண்டு நாட்களில் நிலவும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன.
வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்ட 60 பேருக்கு சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மருத்துவமனைகளின் புள்ளி விபரங்களை சேர்த்தால் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயரும்.
சர் கங்கா ராம் மருத்துவமனையின் வெளிநோயாளி பிரிவில் தினமும் 30 முதல் 35 வெப்ப வாத நோயாளிகள் வருகின்றனர்.
பிச்சைக்காரர்களும், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள வீடில்லாத மக்களும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் நின்று போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போலீசார் நிலைமையும் மோசம் தான்.
டில்லியின் பல்வேறு பகுதிகளில் இதுவரை, 50 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். பிரேத பரிசோதனைக்கு பிறகே இறப்புக்கான காரணம் தெரிய வரும்.
பெயர் வெளியிட விரும்பாத
உயர் போலீஸ் அதிகாரி