ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் நெரிசல் உத்தர பிரதேசத்தில் 116 பேர் உயிரிழப்பு
ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் நெரிசல் உத்தர பிரதேசத்தில் 116 பேர் உயிரிழப்பு
ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் நெரிசல் உத்தர பிரதேசத்தில் 116 பேர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 03, 2024 01:46 AM

ஹத்ராஸ், : உத்தர பிரதேசத்தில், ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் உட்பட, 116 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹத்ராஸ் மாவட்டத்தின் சிகந்த்ரா ராவ் பகுதியில் உள்ள புல்ராய் என்ற கிராமத்தில் திறந்தவெளியில் போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நேற்று நடந்தது.
கடும் வெப்பத்துக்கு மத்தியில் நடந்த இந்த கூட்டத்தில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
மூச்சுத்திணறல்
போலே பாபா பேசி முடித்ததும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு வெளியேறினர்.
இதில் ஒருவர் மீது ஒருவர் விழுந்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், கடும் வெப்பம் நிலவிய நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக, பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி, 116 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், பெண்கள் மற்றும் குழந்தைகள். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என, அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, ஆக்ரா ஏ.டி.ஜி., மற்றும் அலிகார் கமிஷனர் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். மேலும், காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு, உ.பி., அரசு சார்பில், தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 50,000 ரூபாயும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மத்திய அரசு சார்பிலும் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என, உ.பி., போலீசார் தெரிவித்தனர். விபத்து நடந்த இடம், அலிகாரிலிருந்து, 40 கி.மீ., தொலைவிலும், லக்னோவிலிருந்து, 330 கி.மீ., துாரத்திலும் உள்ளது.
வண்டி வண்டியாக...
ஆன்மிக சொற்பொழிவில் பங்கேற்று கூட்டு நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் மற்றும் மயக்கமடைந்தவர்களை, அவர்களின் உறவினர்கள் லாரி, ஆம்புலன்ஸ், கார் என கிடைத்த வாகனங்களில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைகளுக்கு வந்தனர். ஐந்து ஆறு உடல்கள் கிடத்தப்பட்ட லாரியின் முன் அமர்ந்து பெண் ஒருவர் தன் மகளை மீட்டுத் தரும் படி கதறி அழுத காட்சி நெஞ்சை உலுக்கியது. இறந்தவர்களில் பெண்களின் எண்ணிக்கை அதிகம். குழந்தைகளும் அதிக அளவில் இறந்துள்ளனர்.
மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் இடம் இல்லாததால், காயமடைந்த பலருக்கு மருத்துவமனை வாசலில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
காயமடைந்தவர்களை சுற்றி அவர்களின் உறவினர்கள் கவலையுடன் அமர்ந்திருந்தனர். மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மட்டுமே இருந்தார். 'உயிர் காக்கும் ஆக்சிஜன் வசதியும் மருத்துவமனையில் இல்லை' எனக் கூறி இளைஞர் ஒருவர், மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினார்.