பாடாய் படுத்தும் ரீல் மோகம்: ம.பி.,யில் 11 வயது சிறுவன் பலி
பாடாய் படுத்தும் ரீல் மோகம்: ம.பி.,யில் 11 வயது சிறுவன் பலி
பாடாய் படுத்தும் ரீல் மோகம்: ம.பி.,யில் 11 வயது சிறுவன் பலி
UPDATED : ஜூலை 21, 2024 11:00 PM
ADDED : ஜூலை 21, 2024 09:07 PM

போபால்: சமூக வலைதளங்களில் ரீல் பதிவிடும் மோகத்திற்கு அடிமையான ம.பி., மாநில 11 வயது சிறுவன் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலை தளங்களில் பிரபலமாவதற்கு ரீல்ஸ் உதவுகிறது. அதே நேரத்தில் அதனை பயன்படுத்தி உயிரை பொருட்படுத்தாமல் ஆபத்தான இடங்களுக்கு சென்று அங்கு சாகசம் என்ற பெயரில் வீடியோ எடுக்கும் நிலைமை நீண்டுகொண்டே சென்று கொண்டுஇருக்கிறது. இதில் பெரும்பாலானோர் பலியாகி விடுவது தான் சோகத்திலும் சோகம்.
ஒரிரு மாதங்களுக்கு முன்னர் மலை பகுதிக்கு சென்ற பெண் ஒருவர் ரீல்-ஸ்காக காரை ரிவர்ஸ் எடுத்து பலியானார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அருவி அருகில் வீடியோ எடுத்த இளம் பெண் தவறி விழுந்து பலியானார். போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை எச்சரித்தும் யாரும் அதனை கை விடுவதாக இல்லை.
இந்நிலையில் ம.பி., மாநிலத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு படித்து வந்த 11 வயது சிறுவன் ஒருவன் தூக்கிலிடுவது போன்ற ரீல்ஸ் வெளியிட வீடியோ எடுத்துள்ளார். எதிர்பாராதவிதமாக கயிற்றின் முடிச்சு இறுகியதால் கழுத்து நெரிக்கப்பட்டு பலியானான்.
ம.பி., மாநிலம் மொரேனா மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பா நகரில் இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீஸ் அதிகாரி ரவி படோரியா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: உடன் இருந்த மற்ற குழந்தைகள் மத்தியில் தான் கயிற்றில் தூக்கு மாட்டிக்கொண்டு வலியால் துடிப்பது போன்று நடித்துள்ளார். இது நடிப்பு தான் என மற்றவர்கள் நினைத்து கொண்டிருக்கும் போது சிறுவன் சுய நினைவை இழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என அவர் கூறினார்.