முதல்வர் மகன் உட்பட 11 எம்.எல்.சி.,க்கள் கர்நாடக மேலவைக்கு போட்டியின்றி தேர்வு
முதல்வர் மகன் உட்பட 11 எம்.எல்.சி.,க்கள் கர்நாடக மேலவைக்கு போட்டியின்றி தேர்வு
முதல்வர் மகன் உட்பட 11 எம்.எல்.சி.,க்கள் கர்நாடக மேலவைக்கு போட்டியின்றி தேர்வு
ADDED : ஜூன் 07, 2024 07:21 AM

பெங்களூரு: கர்நாடக மேலவைக்கு, முதல்வர் மகன் யதீந்திரா உட்பட 11 பேர், போட்டியின்றி எம்.எல்.சி.,க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
கர்நாடக மேலவைக்கு எம்.எல்.ஏ.,க்கள் மூலம் எம்.எல்.சி.,க்களாக தேர்வு செய்யப்பட்ட, காங்கிரசின் அரவிந்த்குமார் அரலி, சிறிய நீர்பாசன அமைச்சர் போசராஜு, கோவிந்த்ராஜ், ஹரிஷ் குமார்...
பா.ஜ.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த தேஜஸ்வினி கவுடா, நஞ்சுண்டி, பா.ஜ.,வின் முனிராஜ் கவுடா, ரகுநாத் ராவ் மல்காபுரே, ரவிகுமார், ருத்ரேகவுடா, ம.ஜ.த.,வின் பாரூக் ஆகியோர், பதவிக்காலம் வரும் 17 ம் தேதியுடன் முடிகிறது.
புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய, வரும் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், தேர்தல் முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஒரு எம்.எல்.சி.,யை தேர்வு செய்ய 19 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. இதன்படி, காங்கிரஸ் 7; பா.ஜ., 3; ம.ஜ.த., ஒரு எம்.எல்.சி.,யை தேர்வு செய்ய முடியும்.
காங்கிரஸ் சார்பில் முதல்வர் சித்தராமையா மகன் யதீந்திரா, அமைச்சர் போசராஜு, கோவிந்த்ராஜ், சிறுபான்மையினர் ஆணைய முன்னாள் தலைவர் பில்கிஸ் பானு, காங்கிரஸ் செயல் தலைவர் வசந்த்குமார், முன்னாள் எம்.எல்.சி., ஐவன் டிசோசா, கலபுரகி காங்கிரஸ் தலைவர் ஜெகதேவ் குட்டேதார்.
பா.ஜ., சார்பில் முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி, மேலவை எதிர்க்கட்சி தலைவர் ரவிகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., மாருதிராவ் முலே; ம.ஜ.த., சார்பில் ஜவராயி கவுடா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் கடந்த 3 ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு வாபஸ் பெற நேற்று கடைசி நாள். யாரும் வாபஸ் பெறவில்லை. கட்சிகளால் அறிவிக்கப்பட்ட 11 பேரை எதிர்த்து, யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் 11 பேரும் போட்டியின்றி எம்.எல்.சி.,க்களாக தேர்வு செய்யப்பட்டதாக, தேர்தல் அதிகாரி விசாலாட்சி நேற்று அறிவித்தார்.
இதனால் அறிவித்தபடி வரும் 13ம் தேதி தேர்தல் நடக்காது என்பது குறிப்பிடத்தக்கது.