Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 11 எம்.எல்.சி., பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு யதீந்திரா, ரவிக்கு கட்சி மேலிடங்கள் வாய்ப்பு

11 எம்.எல்.சி., பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு யதீந்திரா, ரவிக்கு கட்சி மேலிடங்கள் வாய்ப்பு

11 எம்.எல்.சி., பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு யதீந்திரா, ரவிக்கு கட்சி மேலிடங்கள் வாய்ப்பு

11 எம்.எல்.சி., பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு யதீந்திரா, ரவிக்கு கட்சி மேலிடங்கள் வாய்ப்பு

ADDED : ஜூன் 03, 2024 04:54 AM


Google News
Latest Tamil News
பெங்களூரு : கர்நாடக மேலவையில் காலியாகும் 11 எம்.எல்.சி., பதவிகளுக்கு, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய, காங்கிரஸ், பா.ஜ., வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. முதல்வர் சித்தராமையா மகன் யதீந்திரா, பா.ஜ., முன்னாள் அமைச்சர் சி.டி. ரவிக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது.

13ம் தேதி தேர்தல்


கர்நாடக மேலவைக்கு எம்.எல்.ஏ.,க்கள் மூலம், எம்.எல்.சி.,க்களாக தேர்வு செய்யப்பட்ட, காங்கிரசின் அரவிந்த்குமார் அரலி, அமைச்சர் போசராஜு, முதல்வரின் அரசியல் செயலர் கோவிந்தராஜ், ஹரிஷ்குமார், பா.ஜ., - எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்து விட்டு, காங்கிரசில் இணைந்த தேஜஸ்வினி கவுடா;

நஞ்சுண்டி, பா.ஜ., முனிராஜ் கவுடா, ரகுநாத் ராவ் மல்காபுரே, ரவிகுமார், ருத்ரேகவுடா, ம.ஜ.த.,வின் பாரூக் ஆகியோரின் பதவிக்காலம், வரும் 17ம் தேதியுடன் முடிகிறது.

புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய, வரும் 13ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, பெங்களூரு விதான் சவுதாவில் தேர்தல் நடக்கிறது.

எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போடுகின்றனர். அன்றைய தினம் மாலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.

ஒரு எம்.எல்.சி.,யை தேர்வு செய்ய 19 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை. எம்.எல்.ஏ.,க்கள் அடிப்படையில் பார்த்தால், ஆளுங்கட்சியான காங்கிரசால் 7; பா.ஜ., 3; ம.ஜ.த., ஒரு வேட்பாளரை தேர்வு செய்ய முடியும்.

காங்கிரசில் 7 இடங்களுக்கு கடும் போட்டி எழுந்தது. பல மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள், இரண்டாம் கட்ட தலைவர்கள், தொண்டர்கள் என 300 பேர், 'சீட்' எதிர்பார்த்தனர்.

'சீட்' டுக்கு ஆசைப்படுவோர் பட்டியலுடன், கடந்த சில தினங்களுக்கு முன்பு, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் டில்லி பறந்தனர்.

ராகுல் அதிர்ச்சி


பட்டியலை பார்த்து காங்கிரஸ் எம்.பி., ராகுல் அதிர்ச்சி அடைந்தார். 'இத்தனை பெயர்கள் அடங்கிய பட்டியல் வேண்டாம். சுருக்கமான வேட்பாளர் பட்டியலை கொடுங்கள்' என்று கேட்டு கொண்டார். இதையடுத்து 70 பேர் அடங்கிய பட்டியலை, கட்சி மேலிடத்திடம் கொடுத்து விட்டு, இருவரும் பெங்களூரு திரும்பினர்.

தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய, இன்றே கடைசி நாள். இதனால் சீட் எதிர்பார்த்து இருந்தவர்கள், பட்டியல் எப்போது வெளியாகும் என்று காத்து இருந்தனர். நேற்று மாலை வெளியான பட்டியலில், முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, சிறிய நீர்பாசன அமைச்சர் போசராஜு, முதல்வரின் அரசியல் செயலர் கோவிந்த்ராஜ், கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் வசந்த்குமார், முன்னாள் எம்.எல்.சி., ஐவன் டிசோசா, கலபுரகி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெகதேவ் குட்டேதார், ஷிவமொகாவை சேர்ந்த பெண் பிரமுகர் பில்கிஸ் பானு ஆகியோரின், பெயர்கள் இடம் பெற்று இருந்தன.

இதனால் காங்கிரஸ் 'சீட்' எதிர்பார்த்தவர்களில், பெரும்பாலோனோர் ஏமாற்றம் அடைந்தனர்.

கிடைத்தது எப்படி?


கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, முதல்வர் சித்தராமையாவுக்காக, அவரது மகன் யதீந்திரா தான் எம்.எல்.ஏ.,வாக இருந்த, வருணா தொகுதியை விட்டுகொடுத்தார். இதனால் மேலிடத்திடம் பேசி எப்படியோ மகனுக்கு, சித்தராமையா சீட் வாங்கி கொடுத்து விட்டார்.

சிறிய நீர்பாசன அமைச்சர் போசராஜு, ராய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. ஆனாலும் கட்சி விசுவாசி என்பதால், ஓராண்டுக்கு மட்டும் அவரை எம்.எல்.சி., ஆக்கி, அமைச்சர் பதவி கொடுத்தனர். இதற்கு ராய்ச்சூர் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதல்வர் கரிசனம்


அவரது பதவிக்காலம் முடிந்ததும், அவருக்கு மீண்டும் வாய்ப்பு தர கூடாது என்று, எம்.எல்.ஏ.,க்கள் வற்புறுத்தினர். சீட் கிடைக்கா விட்டால், போசராஜு அமைச்சர் பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு தரப்பட்டு உள்ளது.

முதல்வரின் அரசியல் செயலர் கோவிந்தராஜும், இரண்டு முறை எம்.எல்.சி.,யாக இருந்து விட்டார். அவருக்கு பதிலாக இன்னொருவருக்கு, வாய்ப்பு தர வேண்டும் என்றும், ஒரு தரப்பினர் கூறினர். ஆனால் முதல்வர் கரிசனத்துடன், அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.

இதற்கிடையில் பா.ஜ., மூன்று இடங்களுக்கு, வேட்பாளர்களை அறிவித்தது. முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி, கர்நாடக மேலவை எதிர்க்கட்சி தலைவர் ரவிகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., மாருதிராவ் முலேவுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. ம.ஜ.த., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இன்று காலை வெளியாகிறது.

மீண்டும் 'பெப்பே'

சுமலதா அதிருப்தி

மாண்டியா சுயேச்சை எம்.பி., சுமலதா. லோக்சபா தேர்தலில் பா.ஜ., சீட் எதிர்பார்த்தார். ஆனால் பா.ஜ.,வுடன் கூட்டணி சேர்ந்த, ம.ஜ.த.,வுக்கு சீட் ஒதுக்கப்பட்டது. இதனால் சுமலதா ஏமாற்றம் அடைந்தார். ஆனாலும் அதன்பின்னர் பா.ஜ.,வில் இணைந்தார். தற்போது அவர் எந்த பொறுப்பிலும் இல்லை. எம்.எல்.சி., தேர்தலில், சுமலதாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பேச்சு அடிபட்டது. இதனால் எம்.எல்.சி., பதவியை எதிர்நோக்கி, சுமலதா காத்து இருந்தார். ஆனால் நேற்று வெளியான பட்டியலில், அவர் பெயர் இல்லாததால் அவர் அதிருப்தியில் உள்ளார்.

இடைத்தேர்தலுக்கு

வேட்பாளர் தயார்

கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிட, சீட் கிடைக்காததால், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், காங்கிரசில் இணைந்து, தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். மூத்த தலைவர் என்பதால், அவரை நியமன எம்.எல்.சி., ஆக்கினர். ஆனால் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் பா.ஜ.,வில் சேர்ந்து விட்டார்.

இதனால் அந்த எம்.எல்.சி., பதவி காலியாக உள்ளது. அந்த பதவிக்கு இன்னும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் காங்கிரஸ் நேற்று வெளியிட்ட பட்டியலில், இடைத்தேர்தல் நடக்கும் எம்.எல்.சி., பதவிக்கு, ராய்ச்சூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பசனகவுடா பத்ரேலி என்பவரை வேட்பாளராக அறிவித்து உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us