தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனை
தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனை
தேர்வில் முறைகேடு செய்தால் 10 ஆண்டு சிறை தண்டனை
ADDED : ஜூலை 25, 2024 01:35 AM
பாட்னா, அரசு தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேட்டில் ஈடுபடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையிலான சட்ட மசோதா, பீஹார் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுஉள்ளது.
சமீபத்தில் நடந்த இளநிலை மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வு வினாத்தாள், பீஹாரின் பாட்னா, ஜார்க்கண்டின் ஹசாரிபாக் ஆகிய இரு நகரங்களில் கசிந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதேபோல், பீஹார் மாநில அரசு நடத்தும் பல்வேறு தேர்வுகளுக்கான வினாத்தாளையும் ஒரு கும்பல் கசிய விடுவதும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அரசு தேர்வுகளில் வினாத்தாள் கசிய விடுதல், வினாத்தாள் மோசடி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் புதிய சட்ட மசோதா, பீஹார் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
'பீஹார் பொதுத் தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா 2024' என்ற இந்த மசோதாவை, அமைச்சர் விஜய் குமார் சவுத்ரி நேற்று தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் ஓட்டெடுப்பு வாயிலாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: அரசு பணிக்கான தேர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் அல்லது அமைப்புகளுக்கு, குற்றவாளிகள் என உறுதி செய்யப்படும் பட்சத்தில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் அபராதமாக 1 கோடி ரூபாய் விதிக்கப்படும்.
முறைகேட்டில் கைது செய்யப்படும் நபர்களுக்கு ஜாமின் வழங்கப்படாது. அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். தேர்வில் முறைகேடு நடந்துள்ளது பற்றி அறிந்தும், அது பற்றி புகார் அளிக்காத தேர்வு நடத்தும் அமைப்புகளுக்கும், 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.