இளநிலை நீட் தேர்வு ரத்து செய்ய... உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு மறுப்பு!
இளநிலை நீட் தேர்வு ரத்து செய்ய... உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு மறுப்பு!
இளநிலை நீட் தேர்வு ரத்து செய்ய... உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு மறுப்பு!
ADDED : ஜூலை 24, 2024 02:16 AM
புதுடில்லி, இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக சமீபத்தில் நடந்து முடிந்த, 'நீட்' நுழைவுத் தேர்வை ரத்து செய்யவும், மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
நம் நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவுத் தேர்வை, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது.
இந்த ஆண்டுக்கான தேர்வு, மே 5ல் நடந்தது. முடிவுகள் ஜூன் 4ல் வெளியாகின. மொத்தம், 23 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வு எழுதினர்.
அறிக்கை
தேர்வுக்கு முன்தினம் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. மேலும், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதை தொடர்ந்து நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்யவும், மறுதேர்வு நடத்தக் கோரியும், 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு மனுக்களை விசாரித்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன் விபரம்:
ஜார்க்கண்டின் ஹசாரிபாக், பீஹாரின் பாட்னாவில், இளநிலை நீட் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ளன. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இது தொடர்பாக சி.பி.ஐ., நடத்திய விசாரணையில், வினாத்தாள் கசிவால், 155 மாணவர்கள் பலனடைந்துள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
நீட் வினாத்தாள் பரவலாக கசியவில்லை என்ற சென்னை ஐ.ஐ.டி.,யி-ன் அறிக்கையை, அரசு தாக்கல் செய்துள்ளது. தேசிய தேர்வு முகமை வழங்கிய தரவுகளை நீதிமன்றம் ஆய்வு செய்துள்ளது.
பதிவேட்டில் உள்ள தரவுகளின் அடிப்படையில், வினாத்தாள் கசிவு உட்பட பிற முறைகேடுகளில் அமைப்பு ரீதியாக திட்டமிட்ட மோசடி நடந்துள்ளதாக நிரூபிக்க, போதிய முகாந்திரம் இல்லை.
நியாயமாக இருக்காது
மறு தேர்வுக்கு உத்தரவிட்டால் அது, 23 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.
அதோடு, மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை அட்டவணையில் சீர்குலைவை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் தகுதி வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் கிடைப்பதில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என, அரசு தரப்பு கூறுகிறது.
எனவே, நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வை முழுமையாக ரத்து செய்வதோ, மறு தேர்வு நடந்துவதோ இந்த சந்தர்ப்பத்தில் நியாயமாக இருக்காது.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
'பதிவேட்டில் உள்ள தரவுகளின் அடிப்படையில், வினாத்தாள் கசிவு உட்பட பிற முறைகேடுகளில் அமைப்பு ரீதியாக திட்டமிட்ட மோசடி நடந்துள்ளதாக நிரூபிக்க, போதிய முகாந்திரம் இல்லாததால் தேர்வை ரத்து செய்ய முடியாது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தீர்ப்பை வரவேற்ற கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ''திருத்தப்பட்ட நீட் தேர்வு இறுதி முடிவுகள் இரண்டு நாட்களுக்குள் வெளியாகும்,'' என்றார்.