Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ 'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் துவங்கும்'

'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் துவங்கும்'

'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் துவங்கும்'

'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் விரைவில் துவங்கும்'

ADDED : ஆக 02, 2024 09:47 PM


Google News
'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தாமதமாகிறது என்பதை ஒப்புக்கொள்கிறோம். இது கவலையளிக்கிறது.ஆனாலும், அங்கு மிக விரைவில் கட்டுமான பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெறப்போவதை அனைவரும் காணப் போகிறீர்கள்'' என்று, பார்லிமென்ட்டில், மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

லோக்சபாவில், நேற்றைய கேள்வி நேரத்தின்போது, நீலகிரி எம்.பி., ராஜா,பேசியதாவது:

மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 4 ஆண்டுகளுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. ஜப்பான் நாட்டு அரசின் நிதி உதவியுடன், இந்த மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அறிவிப்பு வெளியிட்டதோடு சரி. அதன்பின், மருத்துவமனை கட்டுவதற்கான நிதி ஒதுக்கவில்லை. ஆரம்பகட்ட கட்டுமான பணிகளும்கூட துவங்கப்படவில்லை.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, 'நிதி ஒதுக்கப்படும்...' என, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இதே சபையில், நிதியமைச்சர் கூட வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆனாலும், நிதி ஒதுக்கப்படவில்லை. தாமதம் ஆகிறது. இதுவரை, மருத்துவமனை அமைக்கப்படவிருக்கும் இடத்தில், ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்கவில்லை.

ஆனால், நாடு முழுவதும் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனைகள் குறித்து பெருமை பேசப்படுகிறது. அதற்குண்டான நிதி ஒதுக்கீடு விபரங்கள் குறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் சபைக்கு அளித்த பதிலில் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

இதில் என்ன வேதனை என்றால், அந்த பதிலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் குறித்து ஒரு வரி கூட இல்லை. இதுதான், மத்திய அரசுக்கு தமிழகத்தின் மீதான அக்கறை.

இவ்வாறு அவர் பேசினார்.

ராஜாவுக்கு பதில் அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா அளித்த பதில்:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று உறுதி அளித்து, அதற்கான ஒப்புதலையும் மத்திய அமைச்சரவை அளித்து விட்டது. ஆனாலும், மருத்துவமனை கட்டுமானத்தில் காலதாமதம் ஆகி விட்டது. தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாக காரணங்களாலேயே கட்டுமானம் தள்ளிப்போகிறது. விரைவில், கட்டுமானப் பணிகள் துவங்கும். அதை அனைவரும் காண்பீர்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

-நமது டில்லி நிருபர்-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us