சபாநாயகர் பதவியை பெற கூட்டணி கட்சிகள்... காய் நகர்த்தல்!
சபாநாயகர் பதவியை பெற கூட்டணி கட்சிகள்... காய் நகர்த்தல்!
சபாநாயகர் பதவியை பெற கூட்டணி கட்சிகள்... காய் நகர்த்தல்!
ADDED : ஜூன் 11, 2024 02:28 AM

நடப்பு, 18வது லோக்சபாவின் புதிய சபாநாயகர் யார் என்ற எதிர்பார்ப்பு தீவிரம் அடைந்து வரும் நிலையில், இந்த பதவியை பெறுவதற்காக கூட்டணி கட்சிகள் காய் நகர்த்தி வருகின்றன. ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவியை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் பா.ஜ., தலைவர்கள் உறுதியாக உள்ளனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகளில் பா.ஜ.,வுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை; இது, அந்த கட்சி தலைமைக்கு சில சிக்கல்களை ஏற்படுத்திஉள்ளது.
அதில் மிக முக்கியமான சிக்கல், லோக்சபா சபாநாயகர் பதவி. புதிய ஆட்சியில் கிங் மேக்கர்களாக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் உருவெடுத்துள்ளதே இதற்கு காரணம்.
அமைச்சரவையில் வலுவான துறைகளை இந்த கட்சிகள் கேட்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், ஒருவழியாக ஆளுக்கொரு கேபினட் மற்றும் இணையமைச்சர் பதவிகளை தந்து இக்கட்சிகளை பா.ஜ., அமைதிப்படுத்திவிட்டது.
இந்நிலையில்தான், லோக்சபா சபாநாயகர் பதவியை இந்த இரு கட்சிகளுமே கேட்டு கோரிக்கை வைத்துள்ளததாக கூறப்படுகிறது. இவ்வாறு குறி வைக்க காரணம், இந்த பதவியின் முக்கியத்துவம் தான்.
இறுதி எஜமானர்
கடந்த சில ஆண்டுகளாகவே பல கட்சிகள் உடைபட்டுக் கொண்டே இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த சிக்கலான சூழ்நிலையில் சபாநாயகரின் செயல்பாடு மிக மிக முக்கியம்.
கட்சிகளின் பிளவுகள், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் கட்சி தாவல், ஆளும் அரசை கவிழ்த்தல் போன்ற பரபரப்பான சமயங்களில் சபாநாயகர் எடுக்கும் முடிவு தான் பல திருப்பங்களை ஏற்படுத்தும்.
என்னதான் கோர்ட், சட்டம் என்று பல விஷயங்கள் இருந்தாலும், பார்லிமென்ட்டை பொறுத்தவரையில் இறுதி எஜமானர் சபாநாயகர் தான். அவர் வைத்தததுதான் அங்கு சட்டம். அதை யாரும் மீற முடியாது.
எம்.பி.,க்கள் கட்சி தாவினால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதும், எடுக்காமல் இருப்பதும், சபாநாயகரின் கைகளில்தான் உள்ளது.
கூட்டணி கட்சிகளை உடைப்பதில் பா.ஜ., கை தேர்ந்தது என்ற விமர்சனம் ஏற்கனவே உள்ளது. எனவே, வரும் காலங்களில் அதுபோன்ற சூழ்நிலை வந்தால், தங்களை காப்பாற்றவும், தற்காத்துக் கொள்ளவும் இந்த சபாநாயகர் பதவியில் இருப்பதே சரியான முடிவு என தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் கருதுகின்றன.
இதன் காரணமாகவே இந்த பதவியை கேட்கின்றன. ஆனால், எந்த காரணத்தாலும், இந்த பதவியை விட்டுக் கொடுக்க கூடாது என்பதில், பா.ஜ., உறுதியாக உள்ளது.
வெளியில் தெரியாவிட்டாலும், தே.ஜ.,கூட்டணிக்குள் இந்த சிக்கல்தான் தற்போது தீவிரமாக உள்ளது. பா.ஜ.,வைப் பொறுத்தவரையில் தற்போதுள்ள ஓம் பிர்லாவையே நீடிக்க வைக்கலாமா அல்லது புதிய நபரை தேர்வு செய்யலாமா என்ற யோசனையில் உள்ளது.
சபாநாயகர் பதவியில் இருந்தவர்களில், எம்.ஏ.அய்யங்கார், குர்தியால் சிங் திலான், பல்ராம் ஜாக்கர், பாலயோகி ஆகிய சிலரை தவிர, இரண்டாவது முறையாக அந்த பதவிக்கு யாரும் வந்ததில்லை என்று வரலாறு உள்ளது. எனவே, ஓம் பிர்லாவுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பது சந்தேகமே.
இந்நிலையில்தான், தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடுவின் குடும்ப உறவினரும், அக்கட்சியின் நிறுவன தலைவர் என்.டி.ராமாராவின் மகளுமான புரந்தேஸ்வரியின் பெயர் இப்பதவிக்கு அடிபடுகிறது.
முதல் அலுவல்
இவர் ஆந்திர மாநில பா.ஜ., தலைவராகவும் இருக்கும் நிலையில், பல ஆண்டுகள் மத்திய அமைச்சராகவும் இருந்த அனுபவம் உள்ளதால், பார்லிமென்ட்டை நடத்தி செல்ல சரியான நபராக இருப்பார் என்று பா.ஜ., வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இருப்பினும், பலமான எதிர்க்கட்சி வரிசை இம்முறை லோக்சபாவுக்குள் இருக்கப் போகிறது. அந்த சவாலை சமாளிக்க, வலுவான நபர் சபாநாயகராக இருக்க வேண்டுமென்பதால், யாரும் எதிர்பாராத புதிய நபரை, இப்பதவிக்கு பா.ஜ., கொண்டு வரலாம் என்றும் தெரிகிறது.
புதிய லோக்சபா கூட்டத்தொடரின் முதல் அலுவலே சபாநாயகர் தேர்தலாகத்தான் இருக்கும். பார்லிமென்ட் விதிகளின்படி மூன்றில் ஒருபங்கு சாதாரண பெரும்பான்மை பலம் இருந்தால் போதும்; சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார்.
கடும் போட்டி
அதற்கு முன்பாக, தற்காலிக சபாநாயகர் நியமனம் இருக்கும். ஜனாதிபதி திரவுபதி முர்மு நியமனம் செய்யும் நபர் தான், தற்காலிக சபாநாயகராக இருப்பார். பொதுவாக மூத்த எம்.பி.,க்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.
அந்த வகையில், மூத்த காங்., - எம்.பி.,யான கேரளாவைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ், தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, வரும் 18ல் லோக்சபா கூட்டத்தொடர் துவங்கப்படலாம் என்றும், 22ல் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்தலாம் என்றும் தகவல்கள் உள்ளன.
அதற்குமுன் சபாநாயகர் பதவிக்கான போட்டியில் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல, தே.ஜ., கூட்டணிக்குள், கடும் போட்டி நிலவுகிறது.
- நமது டில்லி நிருபர் -