ஆயிரம் சந்தேகங்கள்: வங்கி தனிநபர் கடனுக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் உள்ளதா?
ஆயிரம் சந்தேகங்கள்: வங்கி தனிநபர் கடனுக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் உள்ளதா?
ஆயிரம் சந்தேகங்கள்: வங்கி தனிநபர் கடனுக்கு இன்ஷூரன்ஸ் கவரேஜ் உள்ளதா?
ADDED : ஜூலை 08, 2024 12:49 AM

பொதுத் துறை வங்கியில், 'ரெக்கரிங் டிபாசிட்' போட்டிருந்தேன். மார்ச் மாதம், படிவம் 15 எச் கொடுக்காததால், டி.டி.எஸ்., பிடித்துவிட்டனர். வருமான வரி படிவம் சமர்ப்பித்தால், முழுத் தொகையும் கிடைக்க வாய்ப்புள்ளதா?
கே.விஸ்வநாதன், கோவை
உங்கள் மொத்த வருமானம், வரி விலக்கு வரையறைக்குள் இருந்தால், நீங்கள் வரி ஏதும் கட்ட வேண்டாம். அது போன்ற நிலையில் நீங்கள் இருந்தால், அப்போது உங்களிடம் இருந்து பிடிக்கப்பட்ட டி.டி.எஸ்., திரும்ப வந்துவிடும்.
ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளாக வீட்டுக் கடன் பெற்று, மாதத் தவணை கட்டி வந்துள்ளேன். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், 'டாப் அப் லோன்' பெற்று, முதல் தளம் கட்டி, கீழே வாடகைக்கு விட்டு குடியிருந்து வருகிறேன். டாப் அப் லோனை, வீட்டுக் கடனாக மாற்றி, வருமான வரி தாக்கல் பண்ண முடியுமா?
கே.ஜானகிராம், கோவை
பொதுத் துறை வங்கி ஒன்றில் வீட்டுக் கடனும், டாப் அப் லோனும் வாங்கியுள்ளேன். வீட்டுக் கடனை மட்டுமே ஐ.டி.,யில் காட்ட முடிகிறது. டாப் அப் லோனை காட்ட முடியவில்லை. இரண்டையும் வேறொரு வங்கிக்கு மொத்தமாக மாற்றினால், அந்த கடனை ஐ.டி.,யில் காட்ட முடியுமா?
வ.சொர்ணமீனா, விருதுநகர்
வீட்டுக் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு, 2 லட்சம் ரூபாய் வரை கழிவு பெற முடியும். டாப் அப் கடன் வாங்கி, அதை வீட்டைப் புதுப்பித்தல், சீர்செய்தல் ஆகியவற்றுக்கு பயன்படுத்தி இருந்தால், அதற்கு 30,000 ரூபாய் வரை கழிவு பெற முடியும்.
இது, ஒட்டுமொத்த கழிவான 2 லட்சம் ரூபாய்க்குள் தான் அடக்கம். டாப் அப் கடனை வீட்டுக் கடனுக்குள் சேர்த்துக் காண்பிக்க முடியாது என ஆடிட்டர்கள் சொல்கின்றனர்.
அதேபோல், இவை இரண்டையும் வேறொரு வங்கிக்கு ஒரே சமயத்தில் மாற்றி, அந்த மொத்தத் தொகையை வீட்டுக் கடனாக காண்பிப்பதிலும் சிக்கல் இருக்கிறது.
ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு கடனை மாற்ற முடியும். ஆனால், இரண்டும் ஒன்றாக ஆகாது. வீட்டுக் கடன் வீட்டுக்கடனாகவும்; டாப் அப் கடன் டாப் அப் கடனாகவும் தான் நகரும்.
ஆதார் கார்டில் என் பெயர் மட்டும் இருக்கிறது. பான் கார்டில் தந்தை பெயரும் சேர்ந்து உள்ளது. இப்படி வித்தியாசமாக இருக்கலாமா? அல்லது இரண்டிலும் பெயர் ஒரே மாதிரி இருக்க வேண்டுமா? இருக்க வேண்டும் எனில், ஆதார் கார்டில் உள்ளது போல் பான் கார்டில் மாற்ற வேண்டுமா அல்லது பான் கார்டில் உள்ளது போல் ஆதார் கார்டில் மாற்றப் பட வேண்டுமா? மாற்றுவதற்கு எளிமையான வழியை கூறவும்.
பி.பாலசந்தர், சென்னை
பெயர் வித்தியாசமாக இருக்கக்கூடாது. இரண்டிலும் ஒரே மாதிரி தான் இருக்க வேண்டும். ஆதார், பானோடு, பாஸ்போர்ட்டையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அங்கே 'மிடில் நேம்' என்றொரு பகுதி இருக்கும். இனிமேல் குழந்தைகள் பிறந்தால், மூன்று பகுதிகள் கொண்ட பெயரையே வைக்க வேண்டும் போலிருக்கிறது.
ஆதாரிலோ, பானிலோ பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்றால், உங்கள் பள்ளிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களில் என்ன இருக்கிறதோ, அதை ஒட்டியே பெயரை ஒழுங்கு செய்துகொள்ள இயலும்.
இவை எதிலும் ஒழுங்கு இல்லை; அனைத்துமே வித்தியாசமாகத் தான் இருக்கிறது என்றால், அரசிதழில் பெயர் மாற்றம் செய்துகொள்வது மட்டுமே வழி. அதை ஆவணமாக காண்பித்து, இதர அட்டைகளில் பெயரை ஒழுங்கு செய்துகொள்ளலாம்.
வங்கியில் தனிநபர் கடனோ, வீட்டுக் கடனோ வாங்கினால், அந்த கடனுக்கு 'இன்ஷூரன்ஸ் கவரேஜ்' உள்ளதா?
செ. செல்வக்கோ பெருமாள், காஞ்சிபுரம்
தனிநபர் கடன் பற்றி தெரிய வில்லை. வீட்டுக் கடனுக்கு நிச்சயம் இன்ஷூரன்ஸ் கவரேஜ் உண்டு. உங்களுக்கு என்ன நேர்ந்தாலும், தாங்கள் கொடுத்த கடன் மூழ்கிப் போய்விடக் கூடாது என்பதில், வங்கிகள் உஷாராக இருக்கின்றன.
சொல்லப் போனால், வங்கியில் கடன் வாங்கப் போகும்போது, உங்களுக்கான இன்ஷூரன்ஸ் போட்டால் தான், கடனே கொடுக்கின்றனர். இதுபோன்று வலியுறுத்தக்கூடாது என்று சொல்லப்பட்டாலும், பல வங்கிகள் இந்த நடைமுறையைப் பின்பற்றவே செய்கின்றன.
ஒருவகையில் யோசித்தால், இதுவும் நல்லது தான். 15, 20 ஆண்டுகளுக்குள் தனிமனிதருக்கு என்ன வேண்டுமானாலும் நேரலாம். அதற்காக, வங்கிகள் தண்டிக்கப்படக் கூடாது அல்லவா?
இன்னும் இரண்டு மாதங்களில் ஓய்வு பெறப் போகிறேன். 38 ஆண்டுகள் உழைத்துள்ளேன். வரக்கூடிய பணப் பயன் தான் என் எதிர்காலத்துக்கானது. பாதுகாப்பான முதலீட்டு வழியைச் சொல்லுங்கள்.
வி.சந்தானம், சென்னை
அஞ்சலக சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். வட்டி வரக்கூடிய திட்டங்களிலும், நீண்டகால முதலீடுகளிலும் பணத்தைப் போடுங்கள். பொதுத் துறை வங்கிகளில் செய்யக்கூடிய முதலீடே பாதுகாப்பானவை தான்.
அங்கே 5 லட்சம் ரூபாய் வரை டிபாசிட் இன்ஷூரன்ஸ் உண்டு. அஞ்சலகமோ, நேரடியாக அரசின் கட்டுப்பாட்டில் இயங்குவது. இதில் எவ்வளவு பணம் போட்டாலும், அந்த மொத்தத் தொகைக்கும் ஜவாப்தாரி அரசு தான். அதனால் அஞ்சல சேமிப்புகள் 'டபுள் ஸ்ட்ராங்க்' முதலீடு. மேலும் பல சேமிப்புத் திட்டங்களுக்கு வரி விலக்கும் உண்டு.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
ph: 98410 53881