/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ஆயிரம்சந்தேகங்கள்: வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையுமா?ஆயிரம்சந்தேகங்கள்: வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையுமா?
ஆயிரம்சந்தேகங்கள்: வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையுமா?
ஆயிரம்சந்தேகங்கள்: வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையுமா?
ஆயிரம்சந்தேகங்கள்: வீட்டுக்கடன் வட்டி விகிதம் குறையுமா?
ADDED : ஜூன் 03, 2024 01:24 AM

என் மகன் பிரிட்டனில் வசிக்கிறார். இங்கு வங்கியில் என்.ஆர்.ஓ., கணக்கு உள்ளது. அவரிடம் பான் கார்டும் இருக்கிறது. இந்தியாவில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்வதற்கு ஆதார் அட்டை இல்லாததால், கணக்கு துவங்க முடியவில்லை. ஆதார் அட்டை எப்படி பெறுவது?
எஸ்.கண்ணன், திருச்சி.
இந்தியா வரும்போது ஆதார் அட்டை பெற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். அங்கே உட்கார்ந்து கொண்டு, எதற்கு இங்கே முதலீடு செய்ய வேண்டும்? அமெரிக்கா மற்றும் இதர வளர்ந்த நாடுகளில் முதலீடு செய்யச் சொல்லுங்கள். அவரது எதிர்காலம் பெரும்பாலும் வெளிநாட்டில் தான் இருக்கும். அப்படி இருக்கும்போது, இந்திய மியூச்சுவல் பண்டுகள் எதற்கு? அதைவிட நல்ல வருவாய் தரும் வெளிநாட்டு பங்குகளிலோ, இ.டி.எப்.,களிலோ முதலீடு செய்யச் சொல்லுங்கள்.
பெரியளவில் முதல் எதுவும் இல்லாமலே, பங்கு வர்த்தகத்தை முழுநேர வேலையாகச் செய்து, லாபம் பார்க்கின்றனர். இதைப் பற்றிய போதிய அறிமுகம் இல்லாமல் இருக்கிறேன். சற்று முழுமையாக விளக்கவும்?
எம்.எஸ்.கார்த்திகேயன், கோவை.
வர்த்தகம் தெரியாமல், போதிய முதலும் இல்லாமல், டிரேடிங்கில் லாபம் பார்க்கிறேன் என்று யாரேனும் சொன்னால், அவர்களுடைய வார்த்தைகளை நம்பாதீர்கள். அது முழு பொய்.
மேலும், டிரேடிங்கில் லாபம் என்பது எல்லா நாளும் கிடைக்காது. பல நாட்கள் நஷ்டம் வரும். அதைத் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவம் உங்களுக்கு வேண்டும்.
என்.எஸ்.சி., வலைதளத்தில் 'எப் அண்டு ஓ டிரேடிங் ஸ்டாட்டஜிஸ்' என்றொரு பாடம், இணையம் வாயிலாகச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. 10 மணிநேரம் தான். சேர்ந்து படியுங்கள்; ஓரளவு தேவையான அடிப்படைகள் புரியும்.
நான் மாதம் 40,000 ரூபாய் பென்ஷன் வாங்கும் ஓய்வூதியர். எனக்கு வேறு வருமானம், டிபாசிட், இன்சூரன்ஸ் எதுவும் கிடையாது. வருமான வரி படிவம் தாக்கல் செய்ய பழைய முறை, புதிய முறையில் எதை தேர்வு செய்வது நல்லது?
எஸ்.மகேசன், மதுரை.
புதிய வரி விதிப்பு முறையை தேர்வு செய்யுங்கள். 12 x 4 = 4.80 லட்சம் தான் உங்கள் ஆண்டு வருமானம். புதிய வரி விதிப்பு முறையில், ஸ்டாண்டர்டு டிடக்ஷன் உட்பட 7.50 லட்சம் ரூபாய் வரை உங்களுக்கு சலுகை கிடைக்கும். 87ஏ கீழ், உங்களுக்கு ரிபேட் கிடைக்கும். நீங்கள் எந்தவிதமான வரியும் செலுத்த வேண்டியிராது.
சொத்து விற்று வந்த பணத்தை, நீண்டகால மூலதன ஆதாய வரி கட்டாமல் இருப்பதற்காக, எவ்வளவு காலத்துக்குள் புதிய சொத்தில் முதலீடு செய்யவேண்டும்?
சி.சுப்பிரமணியம், சேலம்.
வீட்டை விற்பனை செய்வதற்கு ஓராண்டுக்கு முன்னதாகவோ அல்லது விற்ற பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவோ, மொத்த தொகையையும் புதிய சொத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
புதிய வீடு கட்டுவதாக இருந்தால், முதல் சொத்தை விற்று, உரிமையை மாற்றிக் கொடுத்ததில் இருந்து மூன்று ஆண்டுகளுக்குள் முதலீடு செய்யப்பட வேண்டும். கவனத்தில் இருக்க வேண்டிய அம்சம் ஒன்று உண்டு.
புதிதாக வாங்கிய வீட்டை நீங்கள் மூன்று ஆண்டுகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அப்போது தான் நீண்டகால மூலதன ஆதாய வரியைச் செலுத்தாமல் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதா?
கே.ராமநாதன், ராமநாதபுரம்.
தற்போது எந்த வட்டி குறைப்பும் செய்யப்பட வாய்ப்பில்லை. அமெரிக்காவில் எப்போது அந்நாட்டின் வட்டி விகிதம் குறைக்கப்படுகிறதோ, அதை ஒட்டித் தான் இந்தியா உட்பட உலக நாடுகள் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும். அதையொட்டி, வீட்டுக் கடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றின் வட்டி குறையக்கூடும் என்று ஒருதரப்பு பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆனால், கடன் வாங்கும் அளவு, ஒவ்வொரு நாளும் நம் நாட்டில் உயர்ந்துகொண்டே இருக்கிறது. அதனால், கடனுக்கான வட்டி விகிதம் இதே நிலையில் தொடர்ந்தாலும், கடன் வாங்குவோர் குறையப் போவதில்லை.
இப்படியே இன்னும் கொஞ்ச காலம் நீடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்ற கருத்தை, இன்னொரு தரப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மத்தியில் புதிய அரசு பதவியேற்ற பின்தான், இந்த விஷயத்தில் ஒரு தெளிவு பிறக்கும்.
எதிர்பாராத சூழ்நிலையில் பெரிய நோயால் பாதிக்கப்பட்டால், லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. 100 சதவீதம் ரீஇம்பர்ஸ்மென்ட் தரும் 50 லட்சம் ரூபாய் வரையான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளதா?
செ.செல்வக்கோ பெருமாள், காஞ்சிபுரம்.
ஏன், 1 கோடி ரூபாய் வரை கூட மருத்துவ காப்பீடு எடுத்துக்கொள்ளலாம். வயதுக்கேற்ப இதற்கான பிரீமியம் தொகை வேறுபடும். இளைஞராக இருந்தால் பிரீமியம் குறைவு, வயது அதிகமானால், பிரீமியம் தொகையும் அதிகரிக்கும்.
முதல் விஷயம், இவ்வளவு அதிகமான தொகைக்கு மருத்துவ இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டுமா என்ற முடிவை ஒவ்வொரு தனிநபரும் தமக்கு இருக்கும் நோய், இதர பாதிப்புகளை மனதில் வைத்து எடுக்க வேண்டும்.
இரண்டாவது விஷயம், அப்படியே எடுக்கப்படும் காப்பீடிலும் அனைத்து அம்சங்களும் கவர் ஆகும் என்று சொல்வதற்கு இல்லை. காப்பீடு கவரேஜுக்கு வெளியே, மருத்துவமனையில் கையில் இருந்து கட்ட வேண்டிய தொகை 51 சதவீதம் அளவுக்கு இருப்பதாக சமீபத்தில் ஓர் ஆய்வு தெரிவித்தது.
இந்தத் துறையில் இரண்டு திருப்புமுனை விஷயங்கள் நடைபெறப் போகின்றன. காப்பீடு பாலிசிகளை நீங்களே வாங்குவதற்கு ஏற்ப, 'பீமா சுகம்' என்ற ஒரு இணையதளம் வரப் போகிறது. இரண்டாவது, எல்.ஐ.சி., ஆயுள் காப்பீட்டோடு, மருத்துவ காப்பீடையும் வழங்க திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் சொல்கின்றன.
இது மட்டும் நடந்தால், மருந்து காப்பீடுக்கான பிரீமியம் கணிசமாக குறையும், சேவையும் மேம்படும்.
வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.
ஆயிரம் சந்தேகங்கள்
தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com ph: 98410 53881