Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ஆயிரம் சந்தேகங்கள்: பரவும் 'பார்சல் ஸ்கேம்' எப்படி சமாளிப்பது?

ஆயிரம் சந்தேகங்கள்: பரவும் 'பார்சல் ஸ்கேம்' எப்படி சமாளிப்பது?

ஆயிரம் சந்தேகங்கள்: பரவும் 'பார்சல் ஸ்கேம்' எப்படி சமாளிப்பது?

ஆயிரம் சந்தேகங்கள்: பரவும் 'பார்சல் ஸ்கேம்' எப்படி சமாளிப்பது?

UPDATED : ஜூன் 24, 2024 02:05 AMADDED : ஜூன் 24, 2024 01:30 AM


Google News
Latest Tamil News

ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்து, அதன் பின், அந்த மொத்தத் தொகையை வட்டியுடன், மாதாமாதம் திரும்பப் பெறும் திட்டம் உள்ளதா?


செ.செல்வக்கோ பெருமாள்,

காஞ்சிபுரம்.

வங்கிச் சேமிப்புகளில் இப்படிப்பட்ட திட்டமில்லை. மியூச்சுவல் பண்டுகளில் இருக்கிறது.

மியூச்சுவல் பண்டுகளில், எப்படி எஸ்.ஐ.பி., எனப்படும், முறையான சேமிப்புத் திட்டம் உள்ளதோ, அதேபோல், எஸ்.டபிள்யு.பி., என்ற முறையான பணம் எடுக்கும் திட்டமும் உள்ளது.

ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதை முன்னதாகவே குறிப்பிட்டு, உங்கள் மியூச்சுவல் பண்டு நிறுவனத்திடம் சொன்னீர்கள் என்றால் போதும்.

அந்தத் தொகைக்கு ஈடான யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட்டு, பணம் உங்கள் வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்துவிடும். இத்தகைய 'சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான்'களில், ஒரு சவுகரியம் என்னவென்றால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் எடுத்தது போக, மீதமுள்ள யூனிட்டுகள் தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும். வளர்ச்சிக்கு வளர்ச்சியும் கிடைக்கும்; தேவையான அளவுக்கு பணமும் திரும்ப வரும்.

ஒரு வங்கியில், ஓராண்டுக்கு வைப்பு நிதியில் முதலீடு செய்தேன். 2023 மே 2ல் செய்யப்பட்ட முதலீடு, 2024 மே 2ல் முதிர்ச்சி ஆனது. மறுமுதலீடு செய்தபோது, மே 3ல் தொடங்கி, 2025 மே 3ல் முதிர்ச்சி என பதிவிடப்படுகிறது. இது சரியா?


அ.ப.தங்கராஜன்,

திருவண்ணாமலை.

மே 2 வரை தான் தங்களுடைய வைப்புநிதிக்கு வட்டி கொடுக்கப்பட்டுவிட்டதே? மறுமுதலீடாக இருந்தாலும், புதிய முதலீடு மே 3 முதல் தானே துவங்க முடியும்? ஒரே தேதிக்கு எப்படி இரண்டு முறை வட்டி வழங்குவார்கள்? வங்கி செய்தது சரியென்றே கருதுகிறேன்.

வீட்டுக் கடன் வாங்க முயற்சி செய்தேன். என் கணவருடைய 'கிரெடிட் ஸ்கோர்' குறைவாக இருக்கிறது என்கிறார்கள். எப்படி இதை சீர்செய்வது?


சி.சுஜாதா, விழுப்புரம்.

தொடர்ச்சியாக இதுபோல் வரும் கேள்விகளுக்கு, பல்வேறு உத்திகளைச் சொல்லி வருகிறேன். இன்றைக்கு இன்னொன்று.

வங்கிகளால் கொடுக்கப்படும் கிரெடிட் கார்டு என்பது, பாதுகாப்பில்லா கடன் என்ற வகைமைக்குள் வரும். இந்நிலையில், இப்போது பல வங்கிகள் பாதுகாப்பான கிரெடிட் கார்டு கொடுக்கின்றன. அதாவது, நீங்கள் அந்த வங்கியில் குறிப்பிட்ட அளவு வைப்பு நிதி போட்டிருக்க வேண்டும்.

அதற்கு இணையாக, வங்கிகள் கிரெடிட் கார்டு கொடுக்கும். அந்த கார்டின் கடன் அளவு, உங்கள் வைப்புநிதிக்கு ஈடாக இருக்கும்.

இந்த அட்டையைப் பயன்படுத்திவிட்டு, ஒவ்வொரு மாதமும் உரிய தேதியிலோ, அதற்கு முன்னதாகவோ 'டியூ' தொகையைச் செலுத்தி வந்தால், படிப்படியாக கிரெடிட் ஸ்கோர் உயரும்.

ஒரே ஒரு சிக்கல், இந்த வைப்பு நிதியை, அவசரத்துக்கு முறித்து எடுக்க முடியாது. அது தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட வேண்டும்.

நான் ஒரு பார்சலை மும்பையில் இருந்து இந்தோனேசியாவுக்கு அனுப்பி உள்ளதாகவும்; அது முகவரி சரியில்லாமல் திரும்பிவிட்டது, அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் யாரோ திடீரென்று கூப்பிட்டு சொல்கிறார்கள். நான் அப்படி ஒரு பார்சலை அனுப்பவே இல்லை என்று சொன்னாலும், பயமுறுத்துகிறார்கள் என்ன செய்வது ?


ஈ.தியானேஷ்வர், சென்னை.

ஒன்றும் செய்யாதீர்கள். பொருளாதார ஏமாற்றுப் பேர்வழிகள் புதுப்புது உத்திகளை கண்டுபிடித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். இதில் இந்த 'பார்சல் ஸ்கேம்' ஒன்று. இதேபோல், 'மின்சார பில்' மோசடி ஒன்று நடைபெற்று வருகிறது.

மத்திய மறைமுக வரி மற்றும் கலால் துறை, இதுபோன்ற மோசடிகளைப் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்களை பயமுறுத்தி, பணியவைத்து, உங்களுடைய வங்கி விபரங்களை அபகரித்து, பணத்தைத் திருடுவது தான் இந்த மோசடிக்காரர்களின் திட்டம். நீங்கள் உறுதியோடும் உஷாரோடும் இருங்கள்.

நீங்கள் அனுப்பாமல், எந்தப் பார்சலும் உங்கள் பெயரில் போகாது. அந்தத் தெளிவு இருக்கட்டும். 'யாரேனும் என்னுடைய ஆதாரை திருடி, என் பெயரில் அனுப்பியிருந்தால்' என்றெல்லாம் கற்பனை பயம் வேண்டாம்.

மின்சார கட்டண விஷயத்தில், மின்சாரத் துறையே உங்கள் மின்னஞ்சலுக்கு நேரடியாக பில்லை அனுப்பிவைக்கிறார்கள். அதற்கு உரிய தேதியில், உரிய இணைய தளம் வழியாக பணத்தைக் கட்டிவிட்டால், வேலை முடிந்தது. பில் கட்டவில்லை என்று யாரோ பயமுறுத்தினால், காது கொடுத்து கேட்காதீர்கள். உங்கள் பயம் தான், மோசடிக்காரர்களுக்கு ஆயுதம்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh@gmail.com

ph: 98410 53881





      Our Apps Available On




      Dinamalar

      Follow us