/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ கவனத்தை ஈர்க்கும் பொதுத்துறை நிதிகள் முதலீடு கவனத்தை ஈர்க்கும் பொதுத்துறை நிதிகள் முதலீடு
கவனத்தை ஈர்க்கும் பொதுத்துறை நிதிகள் முதலீடு
கவனத்தை ஈர்க்கும் பொதுத்துறை நிதிகள் முதலீடு
கவனத்தை ஈர்க்கும் பொதுத்துறை நிதிகள் முதலீடு
ADDED : ஜூன் 24, 2024 01:14 AM

அண்மைக் காலத்தில் அதிக பலன் அளித்து, முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்த்திருக்கும் பொதுத்துறை நிதிகள் பற்றி ஒரு கண்ணோட்டம்.
மியூச்சுவல் பண்ட் பரப்பில், ஸ்மால்கேப் நிதிகள் உள்ளிட்டவை கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது பொதுத்துறை நிதிகள் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளன. பொதுத்துறை நிதிகளில் சில கடந்த ஓராண்டு காலத்தில் 100 சதவீதம் வரை பலன் அளித்துள்ளதால் இந்த வகை நிதிகள் ஏற்றதாகக் கருதப்படுகின்றன.
இதனிடையே நரேந்திர மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள நிலையில், பொதுத்துறை நிதிகளின் செயல்பாடு மேலும் கவனத்தை ஈர்க்கிறது. பொதுத்துறை நிதிகளில் முதலீடு செய்வது ஏற்றதா? என்பதை அறிவதற்கு முதலில் இந்த நிதிகளின் தன்மையை அறிந்து கொள்வது அவசியம்.
வளர்ச்சி நிதிகள்
மியூச்சுவல் பண்ட்களில் பல வகையான நிதிகள் இருக்கின்றன. இவற்றில் குறிப்பிட்ட கருப்பொருள் சார்ந்ததாக அமையும் திமெட்டிக் நிதிகள் பிரிவின் கீழ் பொதுத்துறை நிதிகள் வருகின்றன. இந்த வகை நிதிகள் குறிப்பிட்ட கரு சார்ந்த துறைகளில் முதலீடு செய்யும் சமபங்கு நிதிகளாகும். பொதுத்துறை நிதிகள் பெயர் உணர்த்துவது போல, மத்திய மற்றும் மாநில அரசுகளால் நடத்தப்படும் பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்பவை.
இந்த நிதிகள், அவற்றின் வரையறைக்கு ஏற்ப 65 சதவீத தொகையை பொதுத்துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன. எஞ்சிய தொகை பிற துறை சமபங்குகள் மற்றும் கடன்சார் சாதனங்களில் முதலீடு செய்யப்படலாம்.
பொதுவாக அரசின் ஆதரவு இருப்பது பொதுத்துறை நிறுவனங்களின் சாதகமான அம்சமாகும். எனவே இந்த துறை சார்ந்த நிதிகள் ஓரளவு நிலைத்தன்மையும், பாதுகாப்பும் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.
அதே நேரத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் பல வளர்ச்சி வாய்ப்பு கொண்டதாகவும் அமைகின்றன. அரசின் முதலீடு இவற்றின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. நாட்டின் உள்கட்டமைப்பு தேவை போன்றவையும் முக்கிய காரணியாகின்றன. அண்மைக் காலத்தில் இந்த வகை நிதிகள் சிறந்த செயல்பாட்டைக் கொண்டு அதிக பலன் அளித்துள்ளன.
முதலீடு உத்தி
பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானவை என்பதால் இத்துறை எதிர்பார்ப்பிற்கு உரியதாக இருக்கிறது. எனவே பொதுத்துறை நிதிகளும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாய்ப்பிருப்பதாகக் கருதப்படுகிறது.
எனினும், இந்த வகை நிதிகள் தொடர்பான இடர் அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். பொதுவாகவே, குறிப்பிட்ட துறை சார்ந்த நிதிகள் அவை சார்ந்திருக்கும் துறைகள் தொடர்பான இடர் கொண்டவை.
மேலும், ஒரே துறையில் கவனம் செலுத்தப்படுவதும் இடராக அமையலாம். சந்தையின் சுழற்சித் தன்மையும் தாக்கம் செலுத்தலாம். அரசின் கொள்கை முடிவுகளும் முக்கியமாக அமைகின்றன.
முதலீட்டாளர்கள் தங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். குறுகிய கால செயல்பாட்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு முதலீட்டு முடிவுகளை தீர்மானிக்கக் கூடாது. முதலீட்டில் விரிவாக்கம் மிகவும் முக்கியம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட துறை சார்ந்த நிதிகள் நீண்ட கால நோக்கிலானவை மற்றும் தொடர்புடைய துறை சார்ந்த ஆழமான புரிதலும் தேவைப்படுபவையாக கருதப்படுகின்றன. இந்த அம்சங்களை எல்லாம் பரிசீலித்து முதலீடு தொகுப்பில் இந்த வகை நிதிகள் எந்த அளவு தேவை என தீர்மானிக்கலாம்.