/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/ விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வரும் முதல் கன்டெய்னர் கப்பல் விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வரும் முதல் கன்டெய்னர் கப்பல்
விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வரும் முதல் கன்டெய்னர் கப்பல்
விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வரும் முதல் கன்டெய்னர் கப்பல்
விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு வரும் முதல் கன்டெய்னர் கப்பல்
ADDED : ஜூலை 10, 2024 12:57 AM

புதுடில்லி:கேரளாவின் விழிஞ்ஞம் துறைமுகத்தில், சரக்கு கையாளுதல் குறித்த சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாக, கன்டெய்னர்களை இறக்கி, வரிசைப்படுத்தும் பணிகளுக்காக, சீன துறைமுகத்தில் இருந்து, கப்பல் ஒன்று நாளை வர உள்ளதாக, துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலம் விழிஞ்ஞத்தில், 7,500 கோடி ரூபாய் மதிப்பிலான சர்வதேச துறைமுகத்தை, கேரள அரசின் உதவியுடன் 'அதானி' குழுமம் நிர்மாணித்து வருகிறது.
இதற்கான ஒப்பந்தம், கடந்த 2015 ஆகஸ்ட் 17ம் தேதி, அதானி குழுமம், கேரள துறைமுகத் துறை ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தானது. இதையடுத்து, கட்டுமானப் பணிகள் துவங்கி, நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், துறைமுகத்தில் கன்டெய்னர்களை இறக்குவது, வரிசைப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கான சோதனை ஓட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக 2,000 கன்டெய்னர்களை இறக்குதல் மற்றும் 400 கன்டெய்னர்களை வரிசைப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்காக, சீனாவின் ஜிமென் துறைமுகத்தில் இருந்து, 'சான் பெர்னாண்டோ' எனும் கப்பல், நாளை விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு வர உள்ளதாக, துறைமுக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று மாதங்களில், மேலும் பல கன்டெய்னர் கப்பல்கள் நிறுத்தப்பட உள்ளதாகவும், துறைமுகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த பின், செப்டம்பர் அல்லது அக்டோபரில் துறைமுகம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துறைமுக கட்டுமானத்திற்கான மொத்த மதிப்பீட்டில், அதானி குழுமம் இதுவரை 4,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கட்டுமான பணிகள், வருகிற 2028ம் ஆண்டுக்குள் நிறைவடைய உள்ளதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, இத்துறைமுகத்தில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட விரிவாக்கத்திற்காக, மேலும் 9,500 கோடி ரூபாயை அதானி குழுமம் முதலீடு செய்ய உள்ளது.