/செய்திகள்/வர்த்தகம்/பங்கு வர்த்தகம்/கருத்து கணிப்பை பயன்படுத்தி முறைகேடு: பங்கு சந்தை குறித்து புதிதாக கிளம்பும் புகார்கருத்து கணிப்பை பயன்படுத்தி முறைகேடு: பங்கு சந்தை குறித்து புதிதாக கிளம்பும் புகார்
கருத்து கணிப்பை பயன்படுத்தி முறைகேடு: பங்கு சந்தை குறித்து புதிதாக கிளம்பும் புகார்
கருத்து கணிப்பை பயன்படுத்தி முறைகேடு: பங்கு சந்தை குறித்து புதிதாக கிளம்பும் புகார்
கருத்து கணிப்பை பயன்படுத்தி முறைகேடு: பங்கு சந்தை குறித்து புதிதாக கிளம்பும் புகார்
ADDED : ஜூன் 07, 2024 02:46 AM

புதுடில்லி:தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளைப் பயன்படுத்தி, பங்குச் சந்தையில் முறைகேடு நடந்துள்ளது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது குறித்த விசாரணை நடத்த வேண்டும் என திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்ய சபா உறுப்பினர் சாகேத் கோகலே, 'செபி' தலைவர் மாதபி புரி புச்சுக்கு கடிதம் எழுதிஉள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று டில்லியில் பத்திரிகையாளர்களைசந்தித்து, மோடி, அமித் ஷா ஆகியோர் மீது குற்றச் சாட்டுகளை முன்வைத்து உள்ளார்.
ஏற்றம்
ஏழு கட்டங்களாக நடைபெற்ற லோக்சபா தேர்தல், கடந்த 1ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து, அன்று மாலை முதலே ஊடகங்கள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடத் துவங்கின.
பெரும்பாலான கணிப்புகள் பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என தெரிவித்தன. கிட்டத்தட்ட 400 இடங்கள் வரை கூட்டணிக்கு கிடைக்கும் என்றும் கணிப்புகள் வெளியாகின. இதையடுத்து, இரண்டு நாள் விடுமுறைக்கு பின், கடந்த திங்களன்று துவங்கிய பங்குச் சந்தைகள், துவக்கம் முதலே பெரும் ஏற்றத்தைக் கண்டன.
ஆளும் பா.ஜ.,வே தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது என்ற செய்தி, முதலீட்டாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மறுநாள் செவ்வாயன்று காலை, தேர்தல் முடிவுகள் வெளிவரத் துவங்கின.
ஆனால், எதிர்பாராத வகையில், கருத்துக் கணிப்புகளுக்கு மாறாக, முன்னணி நிலவரங்கள் இருந்ததை அடுத்து, சந்தை கடும் சரிவைக் கண்டது. இதனால், முதலீட்டாளர்கள், 31 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.
இதையடுத்து, கருத்துக் கணிப்புகளை பயன்படுத்தி, பங்குச் சந்தையில் மோசடி நடந்துள்ளதாகவும்; இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சாகேத் கோகலே, செபி தலைவர் மாதபி புரி புச்சுக்கு கடிதம் எழுதிஉள்ளார்.
இவ்விவகாரம் குறித்து ராகுலும் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர், பங்குச் சந்தை குறித்து பேசியுள்ளனர்.
'தேர்தல் முடிவுக்குப் பின், பங்குச் சந்தை கடுமையாக உயரும். அதனால், அதில் தற்போது முதலீடு செய்வதே சிறப்பானது' என, அவர்கள் மக்களுக்கு ஆலோசனை வழங்கினர். பங்குச் சந்தையில் முதலீடு செய்யும்படி, அரசு நிர்வாகம் ஆலோசனை வழங்கியது ஏன்?
கடந்த மே 3-1ம் தேதி, அதற்கு முந்தைய இரு நாட்களைவிட, பங்குச் சந்தையில் இரண்டு மடங்கு பரிவர்த்தனை நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக, வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
இழப்பு
தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளில், பா.ஜ.,வின் ஊடகங்கள், அதற்கு, 400க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என, பொய்யான கணிப்புகளை வெளியிட்டன. இதனால், ஜூன் 3ம் தேதி பங்குச் சந்தையில் வர்த்தகம் அதிகளவில் நடந்துள்ளது.
அதே நேரத்தில், தேர்தல் முடிவு வெளியான, 4ம் தேதி, பங்குச் சந்தையில், 30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இது நம் நாட்டு மக்களின் பணமாகும். பிரதமர் மோடி, அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரின் ஆலோசனைகள் கேட்டு, நம் நாட்டு மக்கள் இழப்பைச் சந்தித்துள்ளனர்.
இந்திய வரலாற்றிலேயே இதுதான் மிகப் பெரும் ஊழல். பிரசாரத்தின்போது, மோடி மற்றும் அமித் ஷா, பங்குச் சந்தை பற்றி பேசியது ஏன்? அதுவும் ஒரு குறிப்பிட்ட ஊடக நிறுவனத்துக்கு பேட்டி அளித்தது ஏன்? அந்த ஊடக நிறுவனம்தான், பா.ஜ.,வுக்கு, 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று கணிப்பு வெளியிட்டுள்ளது.
இதன்படி பார்த்தால், பங்குச் சந்தையில் திட்டமிட்டு மிகப் பெரிய மோசடி நடந்துள்ளது.
பா.ஜ.,வுக்கும், போலி கணிப்புகளை வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கும், கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் இடையே என்ன தொடர்பு உள்ளது என்பதை விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.