/செய்திகள்/வர்த்தகம்/ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்/ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (3)ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (3)
ADDED : செப் 16, 2024 01:22 PM
ஜி.எஸ்.டி.,யில் நிலவும் பிரச்னைகள், குறைபாடுகள், குளறுபடிகள், குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், திங்கள் தோறும் 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
'இ-வே பில், இ-இன்வாய்ஸ்' தவறுகளுக்கு அபராதம் சரியல்ல
வரி செலுத்துவோர், மின் ஆவணங்களை (இ--டாகுமெண்ட்ஸ்) சரியாக நிர்வகிப்பது முக்கியமானது. ஆனால், சில நேரங்களில் தவறுகள் நிகழலாம். எனது வாடிக்கையாளர்களில் ஒருவரின் சந்தர்ப்பம் மற்றும் மற்றொரு வாடிக்கையாளரின் சந்தர்ப்பம் குறித்து இங்கு பார்ப்போம்.
இ-வே பில் உருவாக்கத் தவறியிருந்தால் எனது வாடிக்கையாளர் ஒருவர் இ-வே பில் உருவாக்கத்தவறிவிட்டார்; ஆனால், இ--இன்வாய்ஸ் உருவாக்கிவிட்டார். இ--இன்வாய்ஸ் உருவாக்கி 24 மணி நேரம் ஆகிவிட்டதால் அதை நீக்க முடியாது. இந்த நிலையில், ரோந்துப் படையினர் (ரோவிங் ஸ்க்வாட்) இந்த தவறுக்கு அபராதம் விதிக்கின்றனர். இதில், வரி
ஏமாற்றுவதற்கான நோக்கம் எதுவும் இல்லை. மேலும் இ--இன்வாய்சில் விவரங்கள் சரியாகவும், அழிக்க முடியாதவையாகவும் உள்ளன. இந்த சூழலில், பொறுப்பு மிக்க
வர்த்தகருக்கு அரசு அபராதம் விதிப்பது நியாயமற்றது.
இ--இன்வாய்ஸ் உருவாக்கத் தவறியிருந்தால் எனது மற்றொரு வாடிக்கையாளர்
இ--இன்வாய்ஸ் உருவாக்கத் தவறியிருந்தார். இ-வேபில்லை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில், ரோந்துப் படையினர், (ரோவிங் ஸ்க்வாட்) இந்த தவறுக்கு அபராதம் விதிக்கின்றனர். இதில் வரி ஏமாற்றுவதற்கான நோக்கம் எதுவும் இல்லை. மேலும் இ-வே பில்லின் விவரங்கள் சரியாகவும் அழிக்க முடியாதவையாகவும் உள்ளன. இந்த விஷயத்திலும், அரசு அபராதம் விதிப்பது நியாயமற்றது.
இந்த இரு சந்தர்ப்பங்களிலும், தவறு நடந்துள்ளதே தவிர, வரியை ஏய்க்கும் நோக்கம் இல்லை. இ--இன்வாய்ஸ் மற்றும் இ-வே பில் விவரங்கள் சரியாக உள்ளன.
இத்தகைய சந்தர்ப்பங்களில், அரசாங்கம் வரி செலுத்துநரைப் புரிந்துகொண்டு, அவர்களுக்கு அபராதம் விதிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதுவே வரி செலுத்துநர்களின் நலனை காக்கும்.
இ-வே பில் காலாவதியாகி இருந்தால், சுற்றறிக்கை எண்: 10/2019, தேதி 31.05.2019ன் படி, ரூ.5,000
(சி.ஜி.எஸ்.டி., ரூ.5,000 + எஸ்.ஜி. எஸ்.டி., ரூ.5,000) அபராதம் விதிக்க அரசு ஆணையிட்டுள்ளது. ஆனால், ரோவிங் ஸ்க்வாட் அதிகாரிகள் இதனை மதிக்காமல், 200 சதவீதம் அபராதம்
விதிக்கின்றனர். இது வரி செலுத்துநர் களுக்கு மிகுந்த துன்பத்தை ஏற்படுத்துகின்றது. எனவே, இதைச் சரி செய்ய வேண்டும்.
வரி விதிப்பு சட்டங்கள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்றாலும், வரி ஏய்ப்பு நோக்கமில்லாமல் நிகழ்கின்ற தவறுகளுக்கு அபராதம் விதிப்பை அரசு தவிர்க்க வேண்டும். இதனைப்
பரிசீலித்தால், வரி செலுத்துநர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்; வரி விதிப்பு முறையும் நியாயமாக இருக்கும்.
- -ஆர்.முத்துக்குமரன்,
ஜி.எஸ்.டி., வரி ஆலோசகர், ஈரோடு.
ஜி.எஸ்.டி., நடைமுறையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், எதிர்பார்ப்பு, தீர்வு என எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும். அனுப்புவோரின் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.
முகவரி:
ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், சுந்தராபுரம், கோவை - 641 024.
Email: dmrgstviews@dinamalar.in