/செய்திகள்/வர்த்தகம்/ஜி.எஸ்.டி., சந்தேகங்கள்/ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (2)ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை? (2)
ADDED : செப் 16, 2024 01:17 PM
ஜி.எஸ்.டி.,யில் நிலவும் பிரச்னைகள், குறைபாடுகள், குளறுபடிகள், குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, 'தினமலர்' அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன் விவரம், திங்கள் தோறும் 'தினமலர்' இதழில் இப்பகுதியில் வெளியாகும்.
ரயில்வே கேட்டரிங் சேவைக்கு ஐ.டி.சி., அனுமதிக்க வேண்டும்
ரயில்வே கேட்டரிங் துறையில் ஈடுபட்டுள்ளோம். இந்திய வரித் துறையில், ஜி.எஸ்.டி., அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்க சீரமைப்பு நடவடிக்கை. பல்வேறு மறைமுக வரிகளை ஒருங்கமைவு செய்து, ஒற்றை வரிமுறைக்குள் கொண்டு வருவதே இதன் நோக்கம்.
ஆனால், தற்போதைய ஜி.எஸ்.டி., கட்டமைப்பு, ரயில்வே கேட்டரிங் பிரிவில் இருப்பவர்களுக்கு குறிப்பாக, இந்திய ரயில்வேயுடன் ஒப்பந்த அடிப்படையில் கேட்டரிங் சேவையில் ஈடுபட்டுள்ளோருக்கு, உள்ளீட்டு வரிச் சலுகை (ஐ.டி.சி.,)யின் பயன்களை அளிப்பதாக இல்லை.
உள்ளீட்டு வரிச்சலுகை (ஐ.டி.சி.,) கிடைக்காதது, கேட்டரிங் சேவை வழங்கும் ஒப்பந்ததாரர்களைபெரும் நிதிச் சிரமத்துக்கு உள்ளாக்குகிறது. இந்தக் கட்டுப்பாடு எங்களது செயல்பாட்டுச் செலவை அதிகரித்து, பயணிகள் எதிர்பார்க்கும் அளவுக்கு உயர்தரமான உணவை, நியாயமான விலையில் தருவதைப் பாதிக்கிறது.
ரயில்வே கேட்டரிங் சேவைக்கு ஐ.டி.சி.,யை அனுமதித்து, எங்களின் நிதிச்சுமையைக் குறைத்தால், அது எங்களது தரத்தையும், சேவைத் திறனையும் அதிகரிக்க உதவும். நாங்கள் செலுத்தும் ஜி.எஸ்.டி., உரிமக் கட்டணத்தின் மீது 18 சதவீத ஜி.எஸ்.டி.,பொருட்கள் கொள்முதல் மீது 15 சதவீத ஜி.எஸ்.டி., (12 முதல் 18 சதவீதத்தின் சராசரி) ஐ.டி.சி., பெறாமல் மொத்த விற்பனையில் 5 சதவீதம் ஜி.எஸ்.டி., ஆகவே, 38 சதவீதம் வரியிலேயே சென்று விடுகிறது.
கேட்டரிங் துறையில் 40 சதவீதம் லாபம் என்பதே அடிப்படை. அதன்படி, மீதம் இருப்பது 2 சதவீதம் தான். அதை வைத்து தொழிலைத் தொடர்ந்து நடத்துவது மிகச் சிரமமான ஒன்று. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள ஏராளமானவர்கள், கடன் வாங்கி, தொழிலில் முதலீடு செய்துள்ள நிலையில், தொழிலைத் தொடரவும் முடியாமல், விடவும் முடியாமல் பெரும் தவிப்பில் உள்ளனர்.
எனவே, ஒப்பந்த அடிப்படையில் ரயில்வே கேட்டரிங் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஐ.டி.சி.,யை அனுமதிக்க வேண்டும் என, ஜி.எஸ்.டி., கவுன்சிலை கேட்டுக் கொள்கிறோம். இது, ரயில்வே கேட்டரிங் துறை வளர்வதற்கு உதவுவது மட்டுமின்றி, தொழில்செய்வதை எளிமையாக்கி, நியாயமான, சமமான போட்டி நிறைந்த சந்தையை உறுதி செய்யும்.ஐ.டி.சி.,யை அனுமதிக்கும் இந்த திருத்தமானது, ஜி.எஸ்.டி., நடைமுறையில் ஒட்டுமொத்தமாக நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்; ரயில்வே கேட்டரிங் சேவைத் துறையையும் மேம்படுத்தும். (இதே கோரிக்கையினை வலியுறுத்தி, 12 கடிதங்கள் வரி
செலுத்துவோரிடம் இருந்து வந்துள்ளன
ஜி.எஸ்.டி., நடைமுறையில் நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், எதிர்பார்ப்பு, தீர்வு என எதுவாயினும் உங்களின் கருத்துகளை எங்களுக்கு அனுப்புங்கள். 'தினமலர்' நாளிதழில் வெளியாகி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தைப் பெறும். அனுப்புவோரின் விவரங்கள் அவர்கள் விரும்பினால் மட்டுமே வெளியிடப்படும்.
முகவரி:ஜி.எஸ்.டி., - தீர்வைத் தேடி!
தினமலர், டி.வி.ஆர்., ஹவுஸ், சுந்தராபுரம், கோவை - 641 024.
Email: dmrgstviews@dinamalar.in