வைப்ரன்ட் குஜராத் 2024: வரிசை கட்டும் முதலீடுகள்
வைப்ரன்ட் குஜராத் 2024: வரிசை கட்டும் முதலீடுகள்
வைப்ரன்ட் குஜராத் 2024: வரிசை கட்டும் முதலீடுகள்
ADDED : ஜன 11, 2024 01:21 AM

காந்தி நகர்:இந்தியா, அடுத்த 25 ஆண்டுகளில், வளர்ந்த நாடாக மாறும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருவதாக, 'வைப்ரன்ட் குஜராத் 2024' மாநாட்டில், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில், 'வைப்ரன்ட் குஜராத் 2024'ன் 10வது மாநாடு நேற்று துவங்கியது. இந்த மாநாடு முதன்முதலாக, கடந்த 2003ம் ஆண்டில், பிரதமர் மோடி குஜராத் முதல்அமைச்சராக இருந்த போது துவங்கியது.
தற்போது 20வது ஆண்டை கொண்டாடும் விதமாக நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இந்த மாநாட்டை ஒட்டி 'டாடா, ரிலையன்ஸ், அதானி குழுமம்' உள்ளிட்ட நாட்டின் பல முன்னணி நிறுவனங்கள் பெருமளவில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன.
மாநாட்டை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
சமீபத்தில், இந்தியா அதன் 75வது சுதந்திர ஆண்டை நிறைவு செய்தது. அடுத்து நுாறாவது சுதந்திர ஆண்டை கொண்டாடவிருக்கும் வேளையில், வளர்ந்த நாடாக மாறுவதற்கான, அடுத்த 25 ஆண்டுகால இலக்கை நோக்கி தற்போது செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று இந்தியா, உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறி உள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா 11வது இடத்தில் இருந்தது. ஆனால் இன்று, உலகின் முதல் மூன்று பொருளாதாரங்களில் ஒன்றாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இது நடக்கும் என்பது, எனது உத்தரவாதம்.
இன்றைய உலக சூழ்நிலைகளை நாம் அனைவரும் அறிவோம். இதுபோன்ற கடினமான சமயங்களிலும், இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது என்றால், அதற்கு கடந்த 10 ஆண்டுகளில், மேற்கொண்ட சீர்திருத்தங்கள் ஒரு பெரிய காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.