பயணியர் பேருந்துகளிலும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க வலியுறுத்தல்
பயணியர் பேருந்துகளிலும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க வலியுறுத்தல்
பயணியர் பேருந்துகளிலும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 24, 2024 09:01 PM

புதுடில்லி:உலகளாவிய சாலை பாதுகாப்பு அமைப்பான ஐ.ஆர்.எப்., என்னும் 'சர்வதேச சாலை கூட்டமைப்பு', பயணியர் பேருந்து உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களிலும் 'சீட்' பெல்ட் அணிவதை கட்டாயமாக்குமாறு, மத்திய சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் கே.கே.கபிலா, அமைச்சகத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
அப்பாவி உயிர்களை இழக்க நேரிடும், மனதை வதைக்கும், பல்வேறு பயணியர் பேருந்து விபத்துகள் இந்தியாவில் நடைபெறுகின்றன. சீட் பெல்ட் அணிந்திருந்தால் இதில் பெரும்பாலான உயிரிழப்புகள் ஏற்பட்டுஇருக்காது.
இந்தியாவில் பல்வேறு பயணியர் பேருந்து விபத்துகளில் மனதை வதைக்கும் வகையில் உயிரிழப்புகள் நேரிடுகிறது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் பெரும்பாலான உயிரிழப்புகளை தடுத்துஇருக்க முடியும்.
அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, கடந்த 2021ம் ஆண்டு பேருந்து விபத்துகள் காரணமாக, அங்கு 14 நபர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
இதே காரணங்களால் சீனாவில் கடந்த 2022ம் ஆண்டு 215 பேர் உயிர்இழந்துள்ளனர்.
பேருந்துகள் போன்ற பொது போக்குவரத்திற்கு கடுமையான பாதுகாப்பு முறைகளை விதிப்பதன் வாயிலாக வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளன.
இந்தியாவுக்கான தரவுகளை ஆராய்ந்தபோது, பேருந்துகளில் பாதுகாப்பு விதிகளை கட்டாயமாக்குவதில் குறைபாடுகள் இருப்பதை கண்டறிய முடிந்தது.
இது பள்ளிக் குழந்தைகள், ஏழைகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பிரிவினரின் வாழ்க்கையை பாதிக்கிறது.
எனவே, சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில், உடனடியாக, பயணியர் பேருந்துகள், பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களுக்கும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துஉள்ளார்.