உள்கட்டமைப்பு வட்டத்துக்குள் வரும் கப்பல்கள் மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு
உள்கட்டமைப்பு வட்டத்துக்குள் வரும் கப்பல்கள் மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு
உள்கட்டமைப்பு வட்டத்துக்குள் வரும் கப்பல்கள் மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு
UPDATED : செப் 22, 2025 01:54 AM
ADDED : செப் 22, 2025 01:52 AM

புதுடில்லி:மத்திய நிதி அமைச்சகம், 'பெரிய கப்பல்களை', போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளுகை துறையின் கீழ், ஒரு தனி துணைப் பிரிவாக அறிவித்துள்ளது. இது, உள்நாட்டு கப்பல் கட்டுமான திறனை மேம்படுத்தவும், வெளிநாட்டு கப்பல்களை சார்ந்திருப்பதை குறைக்கவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவால், பெரிய வணிக கப்பல்களின் உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்க உள்ளன. குறைந்த வட்டியில் கடன், வரிச் சலுகைகள் மற்றும் எளிதான நிதி உதவி ஆகியவை இதில் அடங்கும்.
கப்பல்களின் வரையறை
கிட்டத்தட்ட 10,000 டன் அல்லது அதற்கு மேல் எடை கொண்ட, இந்திய உரிமையாளர்களைக் கொண்ட, இந்திய கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள்; 1,500 டன் அல்லது அதற்கு மேல் எடை கொண்ட, இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, இந்திய கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட கப்பல்கள் பெரிய கப்பல்களாக வரையறுக்கப்படுகின்றன.
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதியில், 90 சதவீதத்துக்கும் மேல் கடல் வழியாகவே நடக்கிறது. இதில் பெரும்பாலான வர்த்தகம் வெளிநாட்டு கப்பல்கள் வாயிலாக தான் நடைபெறுகிறது.
முக்கியத்துவம்
இந்த முடிவு, உள்நாட்டு கப்பல் போக்குவரத்தை வணிக ரீதியாக லாபகரமாக்கி, இந்த சமநிலையற்ற தன்மையை சரிசெய்ய உதவும் என, கப்பல் தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உலகளாவிய வர்த்தக வழித்தடங்களில், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பிற பிரச்னைகள் ஏற்படும் போது, இந்தியாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்றும்; இந்தியாவின் வர்த்தக ஓட்டங்களை பாதுகாக்கவும், சரக்கு கட்டண செலவை குறைக்கவும் உதவும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
உள்கட்டமைப்பு பிரிவில் வருவதால், இந்திய கப்பல் கட்டும் நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய திருப்புமுனையாக இருக்கும். அவர்கள் எளிதாக நிதி உதவி பெறவும்; குறைந்த வட்டியில் கடன் வாங்கவும்; கடனை திருப்பி செலுத்த நீண்ட கால அவகாசமும் கிடைக்கும்.