சாட்காம் சேவை கட்டணம் அரசுக்கு டிராய் பரிந்துரை
சாட்காம் சேவை கட்டணம் அரசுக்கு டிராய் பரிந்துரை
சாட்காம் சேவை கட்டணம் அரசுக்கு டிராய் பரிந்துரை
ADDED : மே 10, 2025 12:21 AM

புதுடில்லி:சாட்காம் ஆப்பரேட்டர்கள், ஸ்பெக்ட்ரம் கட்டணமாக, ஆண்டு வருவாயில் 4 சதவீதத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
சாட்காம் எனப்படும், செயற்கைக்கோள் வழி இணைய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கான கட்டணங்கள் குறித்து, டிராய் எனப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரை வழங்கியுள்ளது. அதன்படி, சாட்காம் ஆப்பரேட்டர்களுக்கான ஸ்பெக்ட்ரம் கட்டணமாக, ஆண்டு வருவாயில் 4 சதவீதத்தை, அரசுக்கு செலுத்த வேண்டும்.
நகர்ப்புறங்களில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், ஆண்டுக்கு கூடுதலாக ஒரு சந்தாதாரருக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறைக்கு அளித்துள்ள பரிந்துரைகளில் தெரிவித்துள்ளது.
மேலும், செயற்கைக்கோள் பிராட்பேண்ட் ஸ்பெக்ட்ரத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கவும், தேவைப்பட்டால் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் பரிந்துரை செய்துள்ளது.
இந்த வாரத் துவக்கத்தில், எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளை வழங்குவதற்கான ஒப்புதலை தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து பெற்றுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்கின் அதிவேக இணைய வசதியை வழங்க, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.