ADDED : ஜூன் 10, 2025 11:57 PM

4
டாடா பவர் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவான டி.பி., சோலார் நிறுவனத்தின் தமிழக ஆலையில், சோலார் மாட்யூல்கள் உற்பத்தி 4 ஜிகாவாட்டை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 31ம் தேதி வரையிலான காலகட்டத்தில், ஒட்டுமொத்தமாக 4,049 மெகாவாட் சோலார் மாட்யூல்களையும், 1,441 மெகாவாட் சோலார் செல்களையும் உற்பத்தி செய்துள்ளதாக, அறிக்கையொன்றில் டாடா பவர் தெரிவித்துள்ளது.
5.16 லட்சம்
நடப்பு 2024 - 25 சந்தைப்படுத்துதல் ஆண்டில், இம்மாதம் 6ம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்தியா 5.16 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் வெள்ளை சர்க்கரை 4.09 லட்சம் டன்னும், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை 81,845 டன்னும், சுத்திகரிக்கப்படாத சர்க்கரை 25,382 டன்னும் அடங்கும். அதிகபட்சமாக 1.19 லட்சம் டன் சர்க்கரை, சோமாலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, இந்திய சர்க்கரை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.
40,120 கோடி
கடந்த நிதியாண்டில், வலுவான தேவை காரணமாக, இந்திய மசாலாப் பொருட்களின் ஏற்றுமதி 40,120 கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. இது முந்தைய ஆண்டின் 37,910 கோடி ரூபாயைக்காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டான 2024 - 25ல் மிளகாய் ஏற்றுமதி மதிப்பு குறைந்த போதிலும், சீரகம், மஞ்சள், மிளகு மற்றும் நல்லெண்ணெய் ஏற்றுமதி அதிகரித்திருந்தது.
1 லட்சம்
போர்ஸ் மோட்டார்ஸ், பி.எம்.டபிள்யூ., இந்தியா உடன் இணைந்து, சென்னையில் உள்ள அதன் ஆலையில், 1,00,000வது இன்ஜினை உற்பத்தி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஒரு லட்சமாவது இன்ஜின் பி.எம்.டபிள்யூ., எக்ஸ் 5 காரில் பொருத்தப்பட உள்ளது. இந்தோ - ஜெர்மன் ஒத்துழைப்பின் 10வது ஆண்டையும், மேக் இன் இந்தியா திட்டத்துக்கான அர்ப்பணிப்பையும் இந்த மைல்கல் குறிப்பதாக போர்ஸ் தெரிவித்துள்ளது.