ஓசூர் அறிவுசார் வழித்தட திட்ட அறிக்கை ஆலோசகரை நியமிக்க நடவடிக்கை
ஓசூர் அறிவுசார் வழித்தட திட்ட அறிக்கை ஆலோசகரை நியமிக்க நடவடிக்கை
ஓசூர் அறிவுசார் வழித்தட திட்ட அறிக்கை ஆலோசகரை நியமிக்க நடவடிக்கை
ADDED : செப் 14, 2025 12:35 AM

சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் அறிவுசார் வழித்தட திட்டத்தை செயல்படுத்த, விரிவான அறிக்கை தயாரிப்புக்கு ஆலோசகரை நியமிக்க, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், 'டெண்டர்' கோரியுள்ளது.
கல்வி, ஆராய்ச்சி, புதுமை, தகவல் தொழில்நுட்பம், 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய செயல்பாடுகளுக்கான மையமாக, ஒரு அறிவுசார் வழித்தடத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி சாலையில் இருப்பது போல், ஓசூரை சுற்றியுள்ள அவுட்டர் ரிங் ரோடு, சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு, பாகலுார் பைபாஸ் ஆகிய சாலைகளில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், உலகளாவிய திறன் மையங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன.
இத்திட்டத்திற்கான விரிவான அறிக்கை தயாரிக்கும் பணிக்கு ஆலோசகரை நியமிக்க தமிழக அரசின், 'டிட்கோ' நிறுவனம், 'டெண்டர்' கோரிஉள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சர்வதேச தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, திட்ட முழுமை அறிக்கை அவசியம். எனவே, ஓசூர் அறிவுசார் வழித்தடத்திற்காக, அதை ஒப்பந்த நிறுவனம் தயாரித்து வழங்கியதும், வரும் ஜனவரியில் இருந்து பணிகளை துவக்கி, அறிவுசார் வழித்தடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.