மின் வாரிய இழப்பு ரூ.10,868 கோடி வருவாய் ரூ.82,400 கோடி
மின் வாரிய இழப்பு ரூ.10,868 கோடி வருவாய் ரூ.82,400 கோடி
மின் வாரிய இழப்பு ரூ.10,868 கோடி வருவாய் ரூ.82,400 கோடி
ADDED : ஜன 28, 2024 09:18 AM
சென்னை : தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு, 2022 - 23ல் மின் கட்டணம் வாயிலாக, 82,400 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அதைவிட செலவு அதிகம் இருந்ததால், ஒட்டுமொத்த இழப்பு, 10,868 கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த, 2022 செப்., 10ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், அந்த ஆண்டில் கூடுதலாக, 19,600 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
அதிகரிப்பு
தமிழக மின் வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களாக செயல்படுகிறது. தமிழகம் முழுதும் புதிய மின் இணைப்பு வழங்குவது, மின் வினியோகம் செய்யும் பணியை, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மேற்கொள்கிறது.
இந்நிறுவனத்தின், 2022 - 23 நிதிநிலை அறிக்கை தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
அந்த ஆண்டில் மின் கட்டணம் மற்றும் இதர வருவாய் வாயிலாக, 82,400 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. அதை விட, செலவு அதிகரித்து உள்ளது.
உத்தரவு
இதையடுத்து ஒட்டு மொத்த வருவாயை விட, செலவு அதிகம் இருந்ததால், 10,868 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மின் வாரியம், 1.60 லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதால், 2022 செப்., 10ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தி, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.
இதனுடன் சேர்த்து, புதிய மின் நுகர்வோர்கள், ஏற்கனவே உள்ள நுகர்வோர்களின் மின் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், 2021 - 22 உடன் ஒப்பிடும் போது, கடந்த நிதியாண்டில் மின் பகிர்மான கழகத்திற்கு கூடுதலாக, 19,600 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.