மவுசு இழந்த தனி நபர் கடன்கள் ஜொலிக்கும் தங்க அடமான கடன்
மவுசு இழந்த தனி நபர் கடன்கள் ஜொலிக்கும் தங்க அடமான கடன்
மவுசு இழந்த தனி நபர் கடன்கள் ஜொலிக்கும் தங்க அடமான கடன்
UPDATED : செப் 12, 2025 01:21 AM
ADDED : செப் 12, 2025 01:20 AM

புதுடில்லி:நடப்பாண்டில் ஒட்டுமொத்த வங்கிக் கடன் வளர்ச்சி தொடர்ந்து குறைவாக உள்ள நிலையில், தங்க அடமானக் கடன் பிரிவு, வலுவான வளர்ச்சி கண்டுள்ளது. கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற தனி நபர் கடன் பிரிவில் கடன் தேவை குறைந்துள்ள நிலையில், தங்க அடமானக் கடன் பெறுவது அதிகரித்துள்ளது.
![]() |
ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, கடந்த ஜூன் மாத நிலவரப்படி, நிலுவையில் உள்ள தங்க அடமானக் கடன் 124 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
அதே நேரத்தில், கிரெடிட் கார்டுகள் மற்றும் பிற தனிநபர் கடன்களின் வளர்ச்சி ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. கடந்தாண்டும், இந்த இரண்டு பிரிவுகளைக் காட்டிலும் தங்க அடமானக் கடன் அதிக வளர்ச்சி கண்டிருந்தது.
வங்கிகளைப் பொறுத்தவரை தங்க அடமானக் கடன் பிரிவில், வாராக் கடன் சதவீதத்தில் பெரிய மாற்றமில்லை. என்.பி.எப்.சி., எனும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வாராக் கடன், கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது. எனினும், கவலை படக்கூடிய அளவுக்கு அதிகரிக்கவில்லை.
இதுகுறித்து நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்ததாவது:
வங்கிகளின் தங்க அடமானக் கடன் வளர்ச்சிக்கு, நகர்ப்புறம், இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினரே முக்கிய காரணம்.
![]() |
பிற தனி நபர் கடன் மற்றும் வணிக கடன் பெறுவது கடினமாகியுள்ள நிலையில், இவ்வாறு கடன் பெற துவங்கியுள்ளனர். இப்பிரிவில் வங்கிகளின் வாராக் கடன் அளவு நிலையாகவே உள்ளது.
தங்க அடமான கடன் குறித்த ரிசர்வ் வங்கியின் சமீபத்திய விதிமுறைகள் வங்கிகளுக்கு தெளிவு ஏற்படுத்தியுள்ள நிலையில், கடன் வினியோகம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில், இன்றளவிலும் தங்கம் தான் எளிதாக கிடைக்கும் உத்தரவாதம். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வங்கிகள் வாராக் கடன் குறித்து பெரிதாக கவலை கொள்ளத் தேவையில்லை.
இவ்வாறு தெரிவித்தனர்.