'பேடிஎம்' செயலி பதிவிறக்கங்கள் கடந்த வாரம் 1.4 லட்சமாக சரிந்தது
'பேடிஎம்' செயலி பதிவிறக்கங்கள் கடந்த வாரம் 1.4 லட்சமாக சரிந்தது
'பேடிஎம்' செயலி பதிவிறக்கங்கள் கடந்த வாரம் 1.4 லட்சமாக சரிந்தது
ADDED : பிப் 10, 2024 12:32 AM

புதுடில்லி:கூகுள் பிளே ஸ்டோரில் 'பேடிஎம்' செயலிக்கான தினசரி சராசரி பதிவிறக்கங்கள், கடந்த வாரம் 1.4 லட்சமாக குறைந்ததாக, சந்தை ஆய்வு நிறுவனமான 'ஆப்ட்விக்' தரவுகள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 29ம் தேதிக்கு பின், பேடிஎம் பேமன்ட்ஸ் வங்கி டிபாசிட்கள் பெறுவதற்கு ரிசர்வ் வங்கி சமீபத்தில் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
மேலும், சேமிப்பு வங்கி கணக்குகள், வணிக கணக்குகள், பிரீபெய்டு சாதனங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள இருப்புத் தொகையை, அதன் வாடிக்கையாளர்கள் திரும்பப் பெற அல்லது பயன்படுத்த, அவற்றின் இருப்பு உள்ள வரை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, பேடிஎம் செயலி பதிவிறக்கங்கள் குறைந்துள்ளதாக ஆப்ட்விக் நிறுவன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜனவரி 24 முதல் 31ம் தேதி வரையான காலத்தில், கூகுள் பிளே ஸ்டோரில் பேடிஎம் செயலிக்கான தினசரி சராசரி பதிவிறக்கங்கள், 2.4 லட்சம் என்ற அளவில் இருந்தன.
ஆனால், இம்மாதம் 1 முதல் 7ம் தேதி வரையான காலத்தில், பேடிஎம் செயலியின் தினசரி சராசரி பதிவிறக்கங்கள், 1.4 லட்சமாக சரிந்து உள்ளது.
அதேசமயம், இதே பிரிவில் செயல்பட்டு வரும் 'போன்பே' நிறுவன செயலியின் தினசரி சராசரி பதிவிறக்கங்கள், மதிப்பீட்டு காலத்தில் 4.4 லட்சத்தில் இருந்து 5.5 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதேபோல், 'பிம்' செயலி 3.6 லட்சம், கூகுள் பே கிட்டத்தட்ட இரண்டு லட்சம் மற்றும் 'மொபிகுவிக்' 45,000 தினசரி பதிவிறக்கங்களை கண்டுஉள்ளன.
ஆப்பிள் பிளே ஸ்டோரில், போன்பே மற்றும் கூகுள் பே செயலிகளின் 25,000 பதிவிறக்கங்களுடன் ஒப்பிடுகையில், பேடிஎம் செயலி பதிவிறக்கங்கள் வெறும் 8,000த்தில் குறைவாக காணப்பட்டது.
பேடிஎம் இ - காமர்ஸ், 'பை பிளாட்பார்மஸ்' என்று பெயர் மாற்றம் செய்துள்ளது. மேலும் ஓ.என்.டி.சி., நெட்வொர்க்கில் உள்ள 'பிட்சிலா' என்ற வணிக தளத்தை வாங்கி உள்ளது.