நிலையான வருமானத்திற்கு ஏற்ற முதலீடு வாய்ப்புகள்
நிலையான வருமானத்திற்கு ஏற்ற முதலீடு வாய்ப்புகள்
நிலையான வருமானத்திற்கு ஏற்ற முதலீடு வாய்ப்புகள்
ADDED : மே 25, 2025 06:33 PM

வட்டி விகிதம், வரி விதிப்பு, பணவீக்கம் உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில் நிலையான வருமான வாய்ப்பு முதலீடுகளை தேர்வு செய்ய வேண்டும்.
முதலீடு தொகுப்பில் அதிக பலன் அளிக்கும் முதலீடு வாய்ப்புகளோடு, நிலையான பலன் அளிக்கும் நிதி வாய்ப்புகளையும் முதலீட்டாளர்கள் நாடுகின்றனர். அதிலும் குறிப்பாக ஓய்வு காலத்தில் இருக்கும் மூத்த குடிமகன்கள், பெரும்பாலும் மாத வருமானத்திற்காக நிலையான முதலீடு வாய்ப்புகளை அதிகம் நாடுகின்றனர்.
வைப்பு நிதி திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்ட பாரம்பரிய முதலீடு வாய்ப்புகளோடு, கடன்சார் நிதிகள் போன்ற சந்தை சார்ந்த முதலீடு வாய்ப்புகளும் இதற்கு கைகொடுக்கின்றன. இவற்றில் சிறந்த வாய்ப்புகளை தேர்வு செய்வதற்கு, பலவித அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
சாதக அம்சங்கள்
நிலையான வருமானம் அளிக்கும் முதலீடு வாய்ப்புகளை நாடும் போது, வட்டி விகித பலன் மட்டும் அல்லாமல், வரி விதிப்பு, பணவீக்கம் உள்ளிட்ட அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும்; பணமாக்கல் வசதியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சிறந்த முதலீடு வாய்ப்பு என்பது அதிக வட்டி விகித பலன் அளிப்பதோடு, வரி நோக்கிலும் சிறந்ததாக இருக்க வேண்டும். இந்த அம்சங்களை எல்லாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சிறுசேமிப்பு திட்டங்களில் ஒன்றாக அமையும் தேசிய சேமிப்பு சான்றிதழ், 7.7 சதவீத பலனை அளிப்பதோடு ஐந்தாண்டு 'லாக் இன்' காலம் கொண்டது. மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், ஐந்தாண்டு லாக் இன் காலம் கொண்டது மற்றும் 8.20 சதவீத பலன் அளிப்பது.
பொது சேமநல நிதியான பி.பி.எப்., 7.10 சதவீத பலன் அளிக்கிறது. ஐந்தாண்டு கால அஞ்சலக வைப்பு நிதி 7.50 சதவீத பலன் அளிக்கிறது. இவற்றில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் தவிர மற்றவற்றில் அனைத்து தரப்பினரும் முதலீடு செய்யலாம். இந்த திட்டங்கள் இடர் குறைந்தவை.
பி.பி.எப்., திட்டம் அனைத்து கட்டத்திலும் வரி சலுகை கொண்டது. தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் வரிச்சலுகை கொண்டவை. ஆனால், வட்டி விகித பலன் வரி விதிப்புக்கு உட்பட்டது. இந்த திட்டங்களில் மாதாந்திர பலன் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை.
கடன்சார் நிதிகள்
மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் ஒரு வகையாக அமையும் கடன்சார் நிதிகள், இதே போன்ற பலனை அளிக்கவல்லவை. சந்தை சார்ந்த இந்த நிதிகள், பாரம்பரிய வாய்ப்புகளை விட கூடுதல் பலனை அளிக்கக்கூடியவை என்றாலும் இடர் கொண்டவை.
எனினும், சம பங்கு நிதிகளோடு ஒப்பிடும் போது மிதமான இடர் கொண்டவை. அதே நேரத்தில் பணமாக்கல் அம்சமும் கொண்டுள்ளன. தேவையான நேரத்தில் முதலீட்டை விலக்கி பணமாக்கி கொள்வது எளிது.
எனவே, இந்த அம்சங்களை மனதில் கொண்டு முதலீட்டாளர்கள் தங்கள் நிதி சூழலுக்கு ஏற்ற வாய்ப்புகளை தேர்வு செய்யலாம். வரிச்சலுகை மற்றும் பாதுகாப்பு தேவை எனில், தேசிய சேமிப்பு சான்றிதழை நாடலாம். மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை வயதானவர்கள் நாடலாம்.
வளர்ச்சி வாய்ப்பு மற்றும் பணமாக்கல் தன்மையை நாடுபவர்கள் கடன்சார் நிதிகளை தேர்வு செய்யலாம். எனினும், தேவைக்கேற்ப இந்த மூன்று வாய்ப்புகளையும் கலந்து பயன்படுத்தும் உத்தியையும் பின்பற்றலாம்.