முருங்கை இலை பொடி ஏற்றுமதியில் ஆர்வம் அதிகரிப்பு
முருங்கை இலை பொடி ஏற்றுமதியில் ஆர்வம் அதிகரிப்பு
முருங்கை இலை பொடி ஏற்றுமதியில் ஆர்வம் அதிகரிப்பு
ADDED : ஜூன் 12, 2025 01:00 AM

சென்னை:தமிழகத்தில் இருந்து முருங்கை இலை பொடி உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து, ஏற்றுமதி செய்ய, தொழில் நிறுவனங்களிடம் ஆர்வம் ஏற்பட்டுஉள்ளது.
தமிழகத்தில் மதுரை, கரூர் உள்ளிட்ட மாவட்டங் களில், 51,000 ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகரிக்கும் போது, முருங்கைக்காய் விலை சரிவடைந்து, விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
வருவாய்
சில நிறுவனங்கள் தாங்களே, முருங்கை இலை சாகுபடி செய்து, முருங்கை இலை பொடி உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து, ஏற்றுமதி செய்கின்றன.
வெளிநாடுகளில் முருங்கைப் பூ, முருங்கை இலை பொடி, எண்ணெய், விதைக்கு அதிக தேவை உள்ளது.
எனவே, விவசாயிகளுக்கு ஆண்டு முழுதும் நிலையான வருவாய் கிடைக்கவும், முருங்கையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தவும், தமிழக அரசின் டி.என்.எபெக்ஸ் நிறுவனம் உதவுகிறது.
இதற்காக, மதுரையில் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்தை அமைத்துள்ளது.
இதுவரை, 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இருந்து முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தர, அரசுக்கு வேண்டுகோள் வந்து உள்ளது.
பயிற்சி
இதுகுறித்து, டி.என்.எபெக்ஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இயற்கை முறையில் முருங்கை சாகுபடி செய்வது தொடர்பாக, விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
விவசாயிகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இடையே தொடர்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பல்வேறு நிறுவனங்களுக்கும் தரமான முருங்கை, இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கிடைக்கின்றன.
இதுவரை, ஆண்டுக்கு, 300 டன் முருங்கை இலை பொடிக்கு சந்தை வாய்ப்பு வேண்டுகோள் வந்துள்ளது. இதுதவிர, புதிய நபர்களும் தொழில் துவங்குவது தொடர்பாக, தகவல் கேட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.