ஜி.எஸ்.டி., தாக்கல் கட்டுப்பாடு ஜூலை முதல் அமலாகிறது
ஜி.எஸ்.டி., தாக்கல் கட்டுப்பாடு ஜூலை முதல் அமலாகிறது
ஜி.எஸ்.டி., தாக்கல் கட்டுப்பாடு ஜூலை முதல் அமலாகிறது
ADDED : ஜூன் 07, 2025 11:23 PM

புதுடில்லி, ஜூன் 8-
ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதற்கான புதிய கட்டுப்பாடு, வரும் ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வருவதாக ஜி.எஸ்.டி., நெட்வொர்க் நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதன்படி, தற்போது மாதாந்திர, ஆண்டு ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வதற்கு அளிக்கப்படும் மூன்று ஆண்டு கால அவகாசத்துக்கு பின், கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
ஜி.எஸ்.டி., நெட்வொர்க் நிறுவனம், நேற்று வெளியிட்ட அறிவிப்பில், வரி செலுத்துவோர், வரும் ஜூலை மாதத்திற்கான வரி தாக்கலை, இந்தாண்டு ஆகஸ்டு மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளது.
மேலும் அதில் தெரிவித்துள்ளதாவது:
படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் இருந்து, மூன்று ஆண்டுகள் அவகாசத்துக்கு பின்னர், தாக்கல் செய்ய முடியாது.
புதிய கட்டுப்பாடுகள் ஜி.எஸ்.டி., போர்ட்டலில், வரும் ஜூலை மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. எனவே இதுவரை தாக்கல் செய்யாத வரி செலுத்துவோர், விரைந்து தங்கள் பதிவுகள் மற்றும் கோப்புகளுடன் ஜி.எஸ்.டி., தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், மாதாந்திர கணக்கு தாக்கலின் போது, அரசுக்கு செலுத்த வேண்டிய ஜி.எஸ்.டி., தானாக கணக்கிடப்படும். இனி ஜி.எஸ்.டி.ஆர்., 3 பி படிவத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள முடியாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து பட்டயக் கணக்காளர் ஒருவர் கூறுகையில், ஜி.எஸ்.டி., அமைப்பில் ஒழுங்குமுறை ஏற்படுத்தவும், நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்னைக்கு தீர்வு காணவும் இது ஊக்குவிக்கும்.
இதனால், கணினி குளறுபடி மற்றும் கவனக்குறைவாக கணக்குகளை தாக்கல் செய்த வரி செலுத்துவோர் பாதிக்கப்படலாம்.
மேலும், வழக்குகளுக்கு உரிய தீர்வு காணும் வழிமுறை இல்லாதது, உள்ளீட்டு வரி பயனை நிரந்தரமாக மறுக்கவும், நிதி சார்ந்த பின்னடைவுகளுக்கும் வழிவகுக்கக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.