ADDED : ஜூன் 07, 2025 12:36 AM

புதுடில்லி:வரும் 2026 மார்ச் முதல், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ தகவல் தவறானது என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்க, தற்போது புழக்கத்தில் உள்ள 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், 500 ரூபாய் நோட்டு செல்லாது என்ற தவறான தகவல்கள் சிறு வர்த்தகர்கள், கூலி வேலை செய்பவர்கள் மற்றும் கிராமப்புற மக்களிடையே தேவையற்ற பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்து உள்ளதாவது:
தற்போது, 500 ரூபாய் நோட்டு தொடர்பாக வைரலாகும் வீடியோ தகவல் தவறானது. ரிசர்வ் வங்கி, 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது தொடர்பாக அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அவை நோட்டு சட்டப்படி செல்லும். வழக்கம்போல் புழக்கத்தில் தொடரும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.