வெளிநாட்டு பணியாளர்களுக்கு குஜராத்தில் பிரத்யேக குடியிருப்பு
வெளிநாட்டு பணியாளர்களுக்கு குஜராத்தில் பிரத்யேக குடியிருப்பு
வெளிநாட்டு பணியாளர்களுக்கு குஜராத்தில் பிரத்யேக குடியிருப்பு
ADDED : செப் 22, 2025 01:32 AM

புதுடில்லி, செப். 22-
இந்தியாவின் முதல் சிப் தயாரிப்பு ஆலையை, டாடா குழுமம், குஜராத்தின் தோலேராவில் அமைத்து வருகிறது. இங்கு பணிபுரிய வரவுள்ள ஜப்பான் மற்றும் தைவானைச் சேர்ந்த மின்னணு மற்றும் செமிகண்டக்டர் நிறுவன பணியாளர்களுக்கு, பிரத்யேக குடியிருப்பு வசதியை உருவாக்க, இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
வெளிநாட்டு பணியாளர்களுக்கு தேவையான நவீன வசதிகள் மற்றும் பழக்கமான சூழலை வழங்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
டாடா குழுமத்தின் தோலேரா ஆலையில், ஜப்பானின் டோக்கியோ எலக்ட்ரான் மற்றும் தைவானின் பி.எஸ்.எம்.சி., நிறுவனங்களின் பணியாளர்கள் பணிபுரிய இருக்கின்றனர். இவர்கள் இந்த ஆலையில் உபகரணங்களை நிறுவுதல் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், இவர்களுக்கென பிரத்யேக குடியிருப்பு வளாகங்களை அமைக்க இரு நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருவதாக, குஜராத் மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த குடியிருப்பு வசதிகள், டாடா குழுமமும், அரசும் உருவாக்கும் குடியிருப்புகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்றும்; தோலேராவின் பிரதான திட்டத்தின்படி, வெளிநாட்டு பணியாளர்களுக்கான வீடுகளுக்கும், பொழுதுபோக்கு வசதிகளுக்கும் ஏற்கனவே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த குடியிருப்புகள், குஜராத்தின் சைவ உணவுப் பழக்கத்திற்கு வெளிநாட்டினர் பழகுவதற்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.