'ஜெம்' இணையதளத்தில் பாரபட்சம்; கோவை தொழில்முனைவோர் புகார்
'ஜெம்' இணையதளத்தில் பாரபட்சம்; கோவை தொழில்முனைவோர் புகார்
'ஜெம்' இணையதளத்தில் பாரபட்சம்; கோவை தொழில்முனைவோர் புகார்
ADDED : செப் 01, 2025 11:09 PM

கோவை; சிறுதொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய, அரசின் மின்னணு சந்தையான, 'ஜெம்' இணையதளத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக, கோவை தொழில்முனைவோர் புகார் தெரிவித்துஉள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
ஜெம் தளத்தில் சேவையை விற்பனை செய்ய, நடைமுறை சிக்கல்கள் அதிகம் இல்லை. ஆனால், ஒரு பொருளை விற்பனை செய்வதாக இருந்தால், தேவையற்ற சிக்கல்கள் வருகின்றன.
உதாரணமாக, ஆர்.ஓ. பிளான்ட் விற்பனை செய்ய, 'வெண்டார் அசெஸ்மென்ட்'டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த அசெஸ்மென்ட் இரண்டு கட்டங்களாக நடக்கிறது.
முதல் கட்டம், டெஸ்க்டாப் அசெஸ்மென்ட். இதில் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த பொருளுக்கு தொடர்பே இல்லாத, ஆய்வக பரிசோதனை அறிக்கை கேட்கின்றனர். ஒரே சமயத்தில் ஆவணங்களைக் கேட்காமல், தவணைகளாக கேட்பர்.
மொழி பிரச்னை அடுத்து, வீடியோ வெண்டார் அசெஸ்மென்ட். இது ஒரு மணி நேரம் நடக்கும். வீடியோ காலில் வரும் அதிகாரிக்கு, உடைந்த ஆங்கிலம் அல்லது ஹிந்தி மட்டும்தான் தெரியும்.
அதிகாரியின் ஆங்கிலத்தை புரிந்து கொண்டாலும், விண்ணப்பிப்பவர் பேசுவதை அவரால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
வீடியோ காலில் வரும் அலுவலர், தொழிற்சாலை, பணிபுரியும் நபர்கள் என அனைத்தையும் பார்ப்பர். அடுத்து, ஒரு ஆர்.ஓ. பிளான்ட் தயாரிப்பதை வீடியோ காலிலேயே செய்து காட்டச் சொல்வர்.
மூலப்பொருளை எடுத்து வருவதில் இருந்து, உருமாற்றி வடிவம் செய்து, அதைப் பொருத்தி, இயக்கிக் காட்ட வேண்டும். இதை வெறும் ஒரு மணி நேரத்தில் எப்படி செய்து காட்டுவது?
இதுவே, வட இந்திய நிறுவனங்கள் விண்ணப்பித்தாலும், இடைத்தரகர் வாயிலாக விண்ணப்பித்தாலும், உடனே ஒப்புதல் கிடைக்கிறது.
முன்னுரிமை தேவை தமிழகத்தில் தயாரிக்கப்படும் அதே பொருளை, வட மாநில நிறுவனங்கள் தயாரித்து, பல மடங்கு கூடுதல் விலைக்கு, ஜெம் ஒப்பந்தம் வாயிலாக விற்று விடுகின்றன. நமக்கு பாரபட்சம் காட்டப்படுவதால், தமிழக அரசு, மாநில அளவிலான இணையதளத்தை உருவாக்க வேண்டும்.
குறு, சிறு, நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ஜெம் தளத்தில் பதிவு செய்ய, மாநில அரசு தரப்பில் ஓர் உதவி மையம் அமைத்து, தேவையற்ற கெடுபிடிகளைக் களைந்து, நம் தொழில்முனைவோருக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.