'சுங்கத்துறை சார்ந்த புகார்கள் 30 நாளில் தீர்வு காண உறுதி'
'சுங்கத்துறை சார்ந்த புகார்கள் 30 நாளில் தீர்வு காண உறுதி'
'சுங்கத்துறை சார்ந்த புகார்கள் 30 நாளில் தீர்வு காண உறுதி'
ADDED : ஜூன் 13, 2025 01:00 AM

திருப்பூர்,:''துணைவன் இணையதளத்தில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர் பதிவு செய்யும் புகார்களுக்கு, அதிகபட்சம் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்,'' என, மத்திய மறைமுக வரிகள் வாரிய உறுப்பினர் மோகன்குமார் சிங் உறுதி கூறினார்.
ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், சுங்க வரித்துறை சார்ந்த குறைகளுக்கு விரைந்து தீர்வு காண போதிய குறைகேட்பு கட்டமைப்புகள் இல்லை. ஏ.இ.பி.சி., எனப்படும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், திருச்சி சுங்க வரித்துறை கமிஷனரகம் இணைந்து, புதிய முயற்சியாக, 'துணைவன்' (thunaivan.co.in) என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளன.
இதன் துவக்க விழா, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில் நேற்று நடந்தது. அதில் மோகன்குமார் பேசியதாவது:
சிறந்த பாலமாக இந்த போர்ட்டல் சேவை செயல்படும். ஜி.எஸ்.டி., ரீபண்டு, ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்., - டிராபேக் உட்பட சுங்க வரித்துறை சார்ந்து எதிர்கொள்ளும் எல்லா பிரச்னைகளையும், போர்ட்டலில், புகாராக பதிவு செய்யலாம்.
பதிவு செய்து 30 நாட்களுக்குள், அதிகாரிகளால் தீர்வு காணப்படாவிட்டால், முதன்மை கமிஷனருக்கு அனுப்பப்படும் வகையில் போர்ட்டல் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆனால், முதன்மை கமிஷனர் வரை செல்லாத அளவு, அதிகபட்சம் 30 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். பயன்படுத்துவோரிடம் கருத்துகள் பெறப்பட்டு, போர்ட்டல் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.