சென்னை நிறுவனத்தின் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நாட்டின் விமானப்படைக்கு வினியோகம்
சென்னை நிறுவனத்தின் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நாட்டின் விமானப்படைக்கு வினியோகம்
சென்னை நிறுவனத்தின் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு நாட்டின் விமானப்படைக்கு வினியோகம்
ADDED : மே 21, 2025 11:47 PM

சென்னை:சென்னையைச் சேர்ந்த ட்ரோன் உற்பத்தி செய்யும் ராணுவ ஸ்டார்ட்அப் நிறுவனமான, 'பிக் பேங் பூம் சொல்யூஷன்ஸ்', 'வஜ்ரா சென்டினெல்' என்ற ட்ரோன் எதிர்ப்பு அமைப்பின் முதல் தொகுப்பை, விமானப்படைக்கு வெற்றிகரமாக வினியோகம் செய்து உள்ளது.
கடந்த ஆண்டில், ராணுவம் மற்றும் விமானப்படை பயன்பாட்டுக்கு, 200 கோடி ரூபாய் மதிப்பில் இதற்கான ஆர்டர் வழங்கப்பட்டது.
முழுக்க உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்புக்கு, ஐந்து ஆண்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கடுமையான சோதனைக்கு பின், ராணுவ அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விமான தரக் கட்டுப்பாடு இயக்குநரகம் சான்றிதழ் வழங்கி உள்ளது. முதல்முறை சோதனையின் போதே, இந்த சான்றிதழை பெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் உள்ள இந்நிறுவன ஆலையில், இது உற்பத்தி செய்யப்படுகிறது. ரேடார், அலைவரிசை சென்சார் மற்றும் கேமராக்களின் வாயிலாக எதிரி ட்ரோன்களின் நகர்வுகளை துல்லியமாக கணித்து, தாக்கி அழிப்பதில் இந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு சிறந்து விளங்குகிறது.
இந்த ஆலையில், மாதத்துக்கு இதுபோன்ற 100 அமைப்புகளை உற்பத்தி செய்ய முடியும்.
இந்தியாவின் நட்பு நாடுகளுக்கும், அதை விற்பனை செய்ய, அடுத்த கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது.