Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ஆயிரம் சந்தேகங்கள்: இம்முறை பட்ஜெட்டில் சாதாரணர்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்குமா?

ஆயிரம் சந்தேகங்கள்: இம்முறை பட்ஜெட்டில் சாதாரணர்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்குமா?

ஆயிரம் சந்தேகங்கள்: இம்முறை பட்ஜெட்டில் சாதாரணர்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்குமா?

ஆயிரம் சந்தேகங்கள்: இம்முறை பட்ஜெட்டில் சாதாரணர்களுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்குமா?

ADDED : ஜூலை 22, 2024 01:26 AM


Google News
Latest Tamil News

குடும்ப ஓய்வூதியர்களுக்கு கொடுக்கப்படும் பொங்கல் பரிசுப் பணத்துக்கு, வருமான வரி விலக்கு உண்டா? ஓய்வூதியர் மரணமடைந்தால், இறுதிக் காரியங்களுக்குக் கொடுக்கப்படும் 50,000 ரூபாய்க்கு வரி விலக்கு உண்டா?


எச்.குமரேஷ், மதுரை.

நமது நாட்டில், பரிசுகளுக்கான வருமான வரி விதிகளின் படி, ரொக்கமாகவோ, பொருளாகவோ, இதர வகையிலோ கொடுக்கப்படும் பரிசு, 50,000 ரூபாய்க்கு மேல் போனால் அதை 'இதர வகையில் வருவாய்' என்று காண்பித்து, அவரவர் வரி அடுக்குக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.

ஒரு தனிநபரிடம் இருந்து இன்னொரு தனிநபருக்குப் போகும் பரிசுக்கே இது தான் விதி எனும்போது, அரசு கொடுக்கும் பொங்கல் பரிசுப் பணம், இந்த மொத்தத் தொகைக்குள் தான் வரும்.

அதேபோல், ஓய்வூதியர் மரணம் அடைந்தால், தமிழக அரசால் கொடுக்கப்படும் தொகையும் 50,000 ரூபாய் தான். இவை இரண்டும், வருமான வரிக்குள் வர வாய்ப்பில்லை என்பது தான் என் கருத்து.

நான் ஆதார், பான் அட்டைகள் வைத்துள்ளேன். 'முத்ரா' கடன் எப்படி வாங்குவது?


ஜெ.ஜெ.அபிராமி, மதுரை.

உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள வங்கி அல்லது, நீங்கள் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வங்கியில், பி.எம்.எம்.ஒய்., எனும், 'பிரதம மந்திரி முத்ரா யோஜனா' திட்டத்தின் கீழ் கடன் கொடுக்கிறார்களா என்று பாருங்கள். அவர்களை அணுகி, நீங்கள் செய்ய விரும்பும் தொழிலின் திட்டம், சந்தை விபரம் உள்ளிட்டவற்றை தெளிவாக விவரியுங்கள்.

இதில் மூன்று விதமான கடன்கள் உள்ளன. 50,000 ரூபாய் வரை உள்ள கடனுக்கு 'சிசு' என்று பெயர். 50,001 ரூபாய் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை உள்ள கடனுக்கு 'கிஷோர்'; 5,00,001 முதல் 10 லட்சம் ரூபாய் வரை உள்ள கடனுக்கு 'தருண்' என்று பெயர்.

கடந்த ஓராண்டுக்கான வங்கி ஸ்டேட்மென்டையும் எடுத்துச் செல்லுங்கள். அந்த வங்கி கேட்கும் வேறு விபரங்கள் ஏதேனும் இருப்பின், அதையும் வழங்குங்கள். நீங்கள் வழங்கிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் கடன் கொடுக்கப்படும்.

என் னிடம் 'ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் அக்கவுண்ட்' எனும் 'ஆபா' அட்டை உள்ளது. இதன் வாயிலாக 70 வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு வசதிகள் தரப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த அட்டை யைக் கொண்டு, தனியார் மருத்துவமனைகளில் காப்பீட்டு வசதியைப் பெற முடியுமா?


டி.சுவாமிநாதன், சென்னை.

ஆபா என்பது தனிநபர் மருத்துவ ஆவணங்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட திட்டம்.

ஒவ்வொரு நபருக்கும், அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போகும் ஒவ்வொரு மருத்துவமனையிலும், தனித்தனியே 'ஹெல்த் ரெகார்டு'களை உருவாக்காமல், இந்த ஆபா எண்ணைப் பயன்படுத்தி, அதில் தொடர்ச்சியாக மருத்துவ விபரங்களையும், கொடுக்கப்பட்ட சிகிச்சைகளையும் 'அப்டேட்' செய்து வரலாம்.

இத்திட்டத்தில்தான் ஓராண்டில், ஒரு குடும்பத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு கவரேஜ் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த ஆபா திட்டத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்ட தனியார் மருத்துவமனைகள், இந்த ஆபா எண்ணை பயன்படுத்திக்கொள்ளும். அப்படியானால், இதில் பதிவு செய்து கொண்ட மருத்துவமனைகள், கூடவே ஐந்து லட்ச ரூபாய் அளவிலான காப்பீட்டையும் வழங்கவும் கூடும். இதுவும் அந்த தனியார் மருத்துவமனையின் முடிவு தான்.

எனக்குத் தெரிந்து, தனியார் மருத்துவமனைகள் கடந்த சில ஆண்டுகளாக, இந்த வசதியை வழங்குவதில் பின்வாங்குகின்றன. அதனால், நீங்கள் எந்த மருத்துவமனைக்குப் போகிறீர்களோ, அங்கே இந்த காப்பீடு உண்டா என்று கேட்டுக்கொள்ளவும்.

இந்த முறை, பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறதே; சாதாரணர்களுக்கு கூடுதல் வரிச் சலுகைகள் கிடைக்க வாய்ப்புள்ளதா?


ரெ. குருபிரசாத், திருவள்ளூர்.

இதைக் கொடுப்பார்கள், அதைக் கொடுப்பார்கள் என்று கடந்த சில வாரங்களாக நிறைய யூகங்களும் ஆரூடங்களும் வளைய வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், இந்தியாவின் உள்கட்டமைப்பு, வளர்ச்சிப் பணிகள் சீராக நடந்துள்ளன. என்ன முன்னேற்றங்களை எதிர்பார்த்தோமோ அவை நிறைவேறி வருகின்றன.

ஆனால், இந்த வளர்ச்சியின் பயன், நேரடியாக சாதாரணர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் போய் சேர வேண்டும். அவர்கள் சுபிட்சமாக உணர வேண்டும். நாட்டின் வளர்ச்சியை தன்னுடைய மணி பர்ஸிலும் பார்க்கவேண்டும்.

ஆர்.பி.ஐ., மத்திய அரசுக்கு 2.11 லட்சம் கோடி ரூபாய் ஈவுத்தொகை கொடுத்துள்ளது. பணவீக்கமும் படிப்படியாக இலக்கை நோக்கி குறைகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, பட்ஜெட் கொஞ்சம் தாராள மனதோடு இருக்க வாய்ப்புள்ளது.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்

ph: 98410 53881

ஒரு வங்கியில் 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக முதலீடு செய்தால், இன்ஷூரன்ஸ் உண்டு என்ற நிலையில், அதிகப்படியான தொகையைப் பிரித்து, வெவ்வேறு வங்கிகளில் முதலீடு செய்யலாமா?


அ.மயில்சாமி, சூலுார்.

வெவ்வேறு வங்கியில் மட்டுமல்ல; வெவ்வேறு விதமாகவும் முதலீடு செய்து, டிபாசிட் இன்ஷூரன்ஸ் வசதியைப் பெறலாம். நீங்கள் முதல் முதலீட்டாளராகவும், உங்கள் மனைவி இணை முதலீட்டாளராகவும் ஒரு சேமிப்பை துவங்கலாம்.

இரண்டாவது முதலீட்டில், உங்கள் மனைவி முதல் முதலீட்டாளராகவும், நீங்கள் இணை முதலீட்டாளராகவும் இருக்கலாம்.

இதுபோல் உங்கள் பிள்ளைகள் இருப்பார்களானால், அவர்களையும் சேர்த்து முதலீடு செய்யலாம். ஒரு நிறுவனத்தின் டைரக்டராக இருந்தால், அந்தத் தகுதியில் ஒரு முதலீடு செய்யலாம்.

இப்படிப் பல்வேறு விதமாக, உபரி தொகையை பிரித்து முதலீடு செய்யலாம். அதன் வாயிலாக, வங்கி வைப்பு நிதி சேமிப்புக்கான காப்பீட்டையும் பெறலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us