10,000 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை நுண்ணறிவு திட்டம்
10,000 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை நுண்ணறிவு திட்டம்
10,000 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை நுண்ணறிவு திட்டம்
ADDED : ஜன 25, 2024 12:44 AM

புதுடில்லி: மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான 'இந்தியா ஏ.ஐ.' எனும் செயற்கை நுண்ணறிவு திட்டத்திற்கு, அமைச்சரவையிடம் ஒப்புதல் பெற உள்ளதாக அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இத்திட்டம், பொது மற்றும் தனியார் துறைகள் சேர்ந்து ஜி.பி.யு. அடிப்படையிலான சர்வர்கள் அமைப்பதை உள்ளடக்கியது என்றும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்திய ஏ.ஐ. திட்டம், 10,000 கோடி ரூபாய் மதிப்புடையது. இத்திட்டத்திற்கான முன்மொழிவு, அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். இத்திட்டத்தை, பொது மற்றும் தனியார் துறைகள் இணைந்து மேற்கொள்ளும்.
இத்திட்டத்துக்கான கணினி உள்கட்டமைப்பு வசதிகள், பொதுத்துறை தரவு மையங்களிலும், தனியார் தரவு மையங்களிலும் உருவாக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு தேவையான கணினி உள்கட்டமைப்பில், தற்போது அமெரிக்காவும், சீனாவும் முன்னணி யில் உள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா, தென் கொரியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில், வாங்கும் திறன் அதிகம் இருப்பதால், அங்கு அதிக செயல்திறன் கொண்ட சூப்பர் கம்ப்யூட்டர்கள் நிறைய உள்ளன.
நவம்பர் 2022ல் வெளியிடப்பட்ட 'டாப் 500' பட்டியலின்படி, சீனாவில், 162 சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக, அமெரிக்காவில் 127 சூப்பர் கம்ப்யூட்டர்கள் உள்ளன. ஆனால், இந்தியாவில் மூன்று மட்டுமே உள்ளன.
ஜி.பி.யு. சந்தையில், கிட்டத்தட்ட 88 சதவீத பங்குடன் 'என்விடியா' நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள அதிக தேவை காரணமாக, இந்நிறுவனத்திடம் இருந்து ஜி.பி.யு.களைப் பெறுவதற்கு, 12 முதல் 18 மாதங்கள் வரை தாமதமாகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சூப்பர் கம்ப்யூட்டர்களை பொறுத்தவரை, சீனாவில் 162, அமெரிக்காவில் 127 என உள்ளன. ஆனால், இந்தியாவில் மூன்று மட்டுமே உள்ளன.