ADDED : ஜூலை 16, 2024 10:43 AM

புதுடில்லி : நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வாகன விற்பனை வளர்ச்சி 9.40 சதவீதமாக உள்ளது என, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் மனீஷ் ராஜ் சிங்கானியா தெரிவித்துஉள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை வலுவான நிலையில் உள்ளது. பயணியர் கார்கள் மற்றும் வர்த்தக வாகனங்களின் விற்பனையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. குறிப்பாக, டிராக்டர் விற்பனை சரிவடைந்துஉள்ளது.
பயணியர் கார்களின் விற்பனை வளர்ச்சி இந்த ஆண்டில், 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான வெப்பம் மற்றும் தாமதமான பருவமழை இதற்கான முக்கிய காரணங்கள். தேர்தல் காலம் மற்றும் குறைந்த கட்டுமான திட்டங்களால், வர்த்தக வாகன விற்பனையில் பெரிய முன்னேற்றம் இல்லை.
வாகன கடன் மேம்படுத்தல், சரக்கு கட்டுப்பாடு மற்றும் சரியான திட்டமிடல் இருந்தால், வாகன விற்பனை வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.
இவ்வாறு தெரிவித்தார்.