குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமான பணிக்கு இஸ்ரோ 'டெண்டர்'
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமான பணிக்கு இஸ்ரோ 'டெண்டர்'
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமான பணிக்கு இஸ்ரோ 'டெண்டர்'
ADDED : ஜூலை 16, 2024 10:44 AM

சென்னை:துாத்துக்குடி மாவட்டம், குலசேகேரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் கட்டுவதற்கான கட்டுமான பணிக்கு, 'இஸ்ரோ' டெண்டர் கோரியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவுக்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் உள்ளது. அங்குள்ள முதல் மற்றும் இரண்டாவது ஏவுதளங்களில் இருந்து, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகையைச் சேர்ந்த ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்படுகின்றன.
விண்வெளித் துறையில் ஈடுபட, தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில், 2,230 ஏக்கரில், எஸ்.எஸ்.எல்.வி., எனப்படும் சிறிய வகை ராக்கெட்டிற்கான ஏவுதளம் ஒன்றை இஸ்ரோ அமைக்க உள்ளது.
அங்கிருந்து, எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் உதவியுடன், 500 கிலோ எடை குறைவான, 'நானோ' எனப்படும் மிகச்சிறிய செயற்கைக்கோள், குறைந்த துார புவி வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதள திட்டத்திற்கு பிரதமர் மோடி, இந்தாண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். அங்கு நிலத்தை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதள மேடை, அலுவலகம், ஆய்வகம், நுாலகம், விருந்தினர் இல்லம் உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. தற்போது, அந்த கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய இஸ்ரோ, டெண்டர் கோரியுள்ளது.
கட்டுமானப் பணியை விரைந்து முடித்து, 2025 - 26ல் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.