சர்வதேச விமானங்களை வரவேற்க தயாராகும் துாத்துக்குடி விமான நிலையம்
சர்வதேச விமானங்களை வரவேற்க தயாராகும் துாத்துக்குடி விமான நிலையம்
சர்வதேச விமானங்களை வரவேற்க தயாராகும் துாத்துக்குடி விமான நிலையம்
ADDED : ஜூலை 11, 2024 01:27 AM

புதுடில்லி: சர்வதேச விமானங்களை கையாளும் வகையில், துாத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்துதல் மற்றும் ஓடுபாதை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
துாத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு தொழில்துறை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனடிப்படையில், 16,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வியட்நாமை சேர்ந்த 'வின்பாஸ்ட்' நிறுவனத்தின் மின்சார கார் உற்பத்தி ஆலை துாத்துக்குடியில் அமைய உள்ளது. மேலும், 'அக்மி, செம்கார்ப், உம்வெல்ட் மற்றும் லீப் கிரீன் எனர்ஜி' உள்ளிட்ட நிறுவனங்கள் ஹைட்ரஜன் உற்பத்திக்கான ஆலைகளை இப்பகுதியில் அமைக்க உள்ளன. இவைமட்டுமின்றி, குலசேகரபட்டினத்தில் நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை 'இஸ்ரோ' உருவாக்கி வருகிறது.
இப்படி மாவட்டத்தைச் சுற்றி அமைய உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களை கருத்தில் கொண்டு, துாத்துக்குடி விமான நிலையத்தை மேம்படுத்தவும், அதன் ஓடு பாதையை சர்வதேச விமானங்களை கையாளும் வகையில் விரிவாக்கம் செய்யவும், 381 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்காக, தமிழக அரசு 106 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வழங்கியுள்ளது. இப்பணிகள் வருகிற டிசம்பர் காலாண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பணிகள் நிறைவடைந்தால், 'ஏர்பஸ் 321' போன்ற பெரிய விமானங்களை கையாளும் திறனை துாத்துக்குடி விமான நிலையம் பெறும். மேலும், சர்வதேச விமான நிலையமாக்க வேண்டுமென்ற இப்பகுதியினரின் நீண்ட கால கோரிக்கையும் நிறைவேறும் என, கூறப்படுகிறது.