இழப்பின் மதிப்பு தங்கம் விலை குறைந்ததால் குடும்பங்களுக்கு ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி இழப்பு
இழப்பின் மதிப்பு தங்கம் விலை குறைந்ததால் குடும்பங்களுக்கு ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி இழப்பு
இழப்பின் மதிப்பு தங்கம் விலை குறைந்ததால் குடும்பங்களுக்கு ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி இழப்பு
ADDED : ஜூலை 27, 2024 03:03 AM

புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சமீபத்தில் தாக்கல் செய்த நிதியமைச்சர், தங்கத்துக்கான சுங்க வரியை 15 சதவீதத்திலிருந்து ஆறு சதவீதமாக குறைத்து அறிவித்தார். இதையடுத்து, தங்கத்தின் விலை ஐந்து சதவீதத்துக்கும் கூடுதலாக சரிந்தது.
இதனால், குடும்பங்கள் சேமித்து வைத்துள்ள தங்கத்தின் மதிப்பு, ஒரே நாளில் 8.25 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சரிந்துவிட்டது. பங்குச் சந்தைகளையும் கணக்கில் கொண்டால், ஒரே நாளில் அதிக மதிப்பை இழந்த பட்டியலில், இந்த தங்க மதிப்பிழப்பு ஆறாவது இடத்தில் உள்ளது.
உலகளவில், இந்திய குடும்பங்களே அதிக தங்க சேமிப்பை கொண்ட பிரிவினராக உள்ளனர். தற்போதைய நிலவரப்படி, உலகில் உள்ள தங்கத்தில் கிட்டத்தட்ட 11 சதவீதம் இந்திய குடும்பங்கள் வசம் உள்ளது.
இது, அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் பன்னாட்டு நிதியம் ஆகியவற்றிடம் இருக்கும் மொத்த தங்க கையிருப்பைக் காட்டிலும் அதிகமாகும்.
பாதிப்பு
இதனால், பட்ஜெட் அறிவிப்பால் பங்குச் சந்தைகளில் காணப்பட்ட பாதிப்பை விட, குடும்பங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பே அதிகம். ஆனால், குடும்பங்களின் கையிருப்பு ரொக்கமாக இல்லாததால், பங்குச்சந்தைகள் போல உடனடியாக பாதிப்பின் விளைவு தெரியவில்லை.
நடப்பாண்டு துவக்கம் முதல், ஜூன் மாதம் வரை தங்கத்தின் விலை 14.70 சதவீதம் உயர்ந்தது. இதே காலகட்டத்தில், சென்செக்ஸ் குறியீடு 11 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டது. இந்நிலையில், பட்ஜெட்டில், தங்கத்துக்கான சுங்க வரி மற்றும் செஸ் ஆகியவற்றை அரசு குறைத்ததால், தங்கத்தின் விலை 5.20 சதவீதம் வரை சரிந்துள்ளது.
இதையடுத்து, தங்கத்தில் முதலீடு செய்திருந்த வர்த்தகர்கள், விலை மேலும் குறையும் என்று கருதி, தங்களது முதலீடு களை அன்றே விற்று, முடிந்தவரை லாபம் ஈட்டினர்.
ஆனால், தங்கத்தை அடமானமாகப் பெற்று, கடன் வழங்கும் வர்த்தகர்கள் இந்த முடிவினால் கவலை அடைந்துள்ளனர். தங்கத்தின் விலை குறைந்துள்ளதால், அவர்கள் அடமானமாக பெற்ற தங்கத்தின் மதிப்பு சரிந்து, கடனின் பாதுகாப்பும் குறைந்துவிட்டது.
நகை வியாபாரிகள்
எனினும், அரசின் இந்த முடிவால், முறையாக வியாபாரம் செய்யும் நகை வியாபாரிகள் பலனடைவர் எனக் கூறப்படுகிறது. தங்கக் கடத்தலை கட்டுப்படுத்த, தங்கத்தின் மீதான வரியை குறைக்க வேண்டும் என நகை வியாபாரிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
சுங்க வரி குறைந்ததை அடுத்து, கடத்தல் குறைவது என்பது அரசுக்கும் ஒரு சாதகமான விஷயம் தான். எனினும், இம்முடிவு எவ்வாறு அதன் வருவாயை பாதிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
எப்படி 8 லட்சம் கோடி இழப்பு?
குடும்பங்கள் வசம் உள்ள தங்கம் தோராயமாக 30,000 டன்
22ம் தேதி 30,000 டன் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.204.75 லட்சம் கோடி
23ம் தேதி 30,000 டன் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.196.50 லட்சம் கோடி
இழப்பின் மதிப்பு ரூ.8.25 லட்சம் கோடி